இயந்திரக் கோளாறால் யாழ்ப்பாணம் கடற்பகுதியில் கரை ஒதுங்கிய 3 தமிழக மீனவர்கள் கைது


யாழ்ப்பாணம் மாதகல் கடற்பகுதியில் படகுடன் கரை ஒதுங்கிய 3 தமிழக மீனவர்கள்.

ராமேசுவரம்: யாழ்ப்பாணம் மாதகல் கடற்பகுதியில் இயந்திரக் கோளாறு காரணமாக கரை ஒதுங்கிய தமிழக நாட்டுப் படகிலிருந்து 3 மீனவர்களை இலங்கை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் கடற்பகுதியிலிருந்து நாட்டுப் படகில் கடலுக்குச் சென்ற வாஞ்சிநாதன், மகேஷ், ரஞ்சித் குமார் ஆகிய மூன்று மீனவர்கள் கடலுக்குச் சென்றுள்ளனர். மீனவர்கள் சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது படகில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டு நீரோட்டத்தினால் படகு இலங்கை கடற்பகுதிக்குள் சென்று விட்டது.

இந்நிலையில் யாழ்ப்பாணம் மாதகல் கடற்பகுதியில் நாட்டுப் படகு நேற்று பிற்பகல் கரை ஒதுங்கியது. படகிலிருந்த மூன்று மீனவர்களை போலீஸார் கைது செய்து யாழ்ப்பாணம் மாவட்டம் இளவாலை காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
சட்ட நடவடிக்கைகளுக்காக நாளை நீதிமன்றத்தில் மூன்று மீனவர்களும் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.