பவன் கல்யாணுக்காக பிரச்சாரம் செய்யப் போவதில்லை... சிரஞ்சீவி திடீர் அறிவிப்பு!


சிரஞ்சீவி

"சகோதரர் பவன் கல்யாண் போட்டியிடும் பிதாபுரம் சட்டமன்றத் தொகுதியில், அவருக்கு பிரச்சாரம் செய்யவில்லை" என்று நடிகர் சிரஞ்சீவி விளக்கம் அளித்துள்ளார்.

ஆந்திர மாநிலத்தில் 175 சட்டப் பேரவைத் தொகுதிகள் மற்றும் 25 மக்களவைத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வரும் மே 13-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அம்மாநிலத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா ஆகிய கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திக்கின்றன. இதில், ஆந்திராவில் பாஜக 6 தொகுதிகள், தெலுங்கு தேசம் 17 தொகுதிகள், ஜன சேனா கட்சி 2 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.

ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் மற்றும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு

இதேபோல், சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக 10 தொகுதிகள், தெலுங்கு தேசம் 144 தொகுதிகள், ஜன சேனா கட்சி 21 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. இதில் ஜன சேனா தலைவர் பவன் கல்யாண் பிதாபுரம் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். இதையடுத்து பெரும் ரசிகர்கள், தொண்டர்கள் படையுடன் பிரம்மாண்டமாக ஊர்வலமாக சென்று பவன் கல்யாண் வேட்புமனுதாக்கல் செய்தார். தற்போது தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு பவன் கல்யாணுக்கு வாக்களித்து ஆதரவு அளிக்கும்படி, சகோதரரும், நடிகருமான சிரஞ்சீவி வீடியோ வெளியிட்டிருந்தார். இதையடுத்து பவன் கல்யாணுக்கு ஆதரவாக தேர்தல் பொதுக்கூட்டம் மற்றும் பிரச்சாரத்தில் சிரஞ்சீவி ஈடுபடுவார் என்று தகவல் பரவியது. இதை சிரஞ்சீவி மறுத்துள்ளார்.

பவன் கல்யான் சிரஞ்சீவி

இதுதொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த சிரஞ்சீவி, "சட்டமன்ற தேர்தலில் பிதாபுரம் தொகுதியில் பவன் கல்யாணுக்கு ஆதரவாக நான் பிரச்சாரம் செய்யப்போவதில்லை. இதுதொடர்பாக ஆந்திரா அரசியலில் பரவும் செய்தி அனைத்தும் வதந்திதான். நான் எந்த கட்சியையும் சாராதவன். அனைத்து கட்சிக்கும் நான் பொதுவானவன். சகோதரர் பவன் கல்யாண், தேர்தல் பிரச்சாரத்திற்கு அழைத்தது உண்மை. ஆனால், என்னுடைய முடிவுக்கே அவர் விட்டு விட்டனர்" என்று அவர் கூறினார்

இதையும் வாசிக்கலாமே...

x