மயிலாடுதுறை அருகே திருக்கடையூரில் கஜகஸ்தான் நாட்டைச் சேர்ந்த தம்பதிகள் இந்து மதத்திற்கு மாறி தமிழ் கலாச்சாரப்படி அம்மி மிதித்து அருந்ததி பார்த்து மாங்கல்யதாரணம் செய்து திருமணம் செய்து கொண்டனர்.
கஜகஸ்தான் நாட்டைச் சேர்ந்த டிமித்ரி - எலேனா தம்பதி கணினி மென்பொருள் பொறியாளர்களாக உள்ளனர். உலகம் முழுவதும் சுற்றி வரும் இவர்கள் இந்து மதத்தின் மீது ஆர்வம் கொண்டு கிறிஸ்தவ மதத்திலிருந்து இந்து மதத்திற்கு மதம் மாறி உள்ளனர். தமிழ் கலாச்சாரம் மீதும் கொண்ட பற்றுதல் காரணமாக ஆண்டுக்கு ஒரு முறை தமிழ்நாடு வருகை புரிந்து தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களுக்கு சென்று வழிபாடு செய்து செல்கின்றனர். இந்நிலையில் கிறிஸ்தவ முறைப்படி திருமணமான இவர்கள் இந்து மதத்திற்கு மாறியதாலும் தமிழ் கலாச்சாரம் மீது தீராத ஆர்வம் கொண்டு தமிழ் முறைப்படி திருமணம் செய்ய முடிவெடுத்தனர்.
இதற்காக இந்தியா வருகை புரிந்துள்ள கஜகஸ்தான் நாட்டைச் சேர்ந்த இவர்கள் இன்று மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் உள்ள தனியார் கல்யாண மண்டபம் ஒன்றில் திருமணம் செய்து கொண்டனர். அப்போது அம்மி மிதித்து அருந்ததி பார்த்து, மாலை மாற்றி மாங்கல்ய தாரம் செய்தும் திருமணம் செய்து கொண்டனர்.
நல்லாடை கிராமத்தைச் சார்ந்த நாடி ஜோதிடர் கோபிநாத் மற்றும் நல்லடை கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் திருமணத்திற்கு வருகை தந்து நலுங்கு வைத்தும், மாலை மாற்றியும் திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினர்.
அதனை தொடர்ந்து உலக புகழ்பெற்ற திருக்கடையூர் ஸ்ரீ அபிராமி உடனாகிய ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயிலுக்கு சென்ற தம்பதியினர் சுவாமி, அம்பாள் சன்னதிகளுக்கு சென்று சிறப்பு தரிசனம் செய்து வழிபாடு மேற்கொண்டனர்.
இதையும் வாசிக்கலாமே...