கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள்... அகிலேஷ் யாதவ் அதிரடி!


அகிலேஷ் யாதவ்

கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் பாஜகவுக்கு எதிராக வாக்களிப்பார்கள். தடுப்பூசி தயாரித்த நிறுவங்களிடமிருந்து பாஜக தேர்தல் நன்கொடை பெற்றுள்ளது என்று சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்

உத்தரப் பிரதேச மாநிலம் புடவுனில் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், "பாஜகவினால் அரசியல் சாசனத்துக்கு மட்டும் அச்சுறுத்தல் இல்லை, அவர்களின் முடிவால் உங்களின் வாழ்க்கையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் தங்களின் சான்றிதழ்களைப் பார்க்கும்போது என்ன நினைத்துக் கொள்வார்கள் என்று சிந்தியுங்கள். இப்போது அவர்கள் பாஜகவுக்கு எதிராக வாக்களிக்க முன்வருவார்கள். ஏனெனில் இது ஒரு பேரழிவுக்கான வாய்ப்பை உருவாக்கியுள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசி

அவர்கள் இந்திய அரசியல் சாசனத்தை மாற்ற விரும்பினார்கள். இரண்டாவதாக கோவிஷீல்டு தடுப்பூசி பிரச்சினை இப்போது உங்கள் முன்பு வந்துள்ளது. தடுப்பூசி தயாரித்த நிறுவங்களிடமிருந்து பாஜக தேர்தல் நன்கொடை பெற்றுள்ளது" என்று பேசினார்.

மேலும், “ தொழில் அதிபர்களுக்கு ஆதரவாகவே பாஜக செயல்பட்டது. விவசாயிகளின் கடனை பாஜக அரசு தள்ளுபடி செய்யவில்லை. ஆனால் தொழில் அதிபர்களின் கடனை அவர்கள் தள்ளுபடி செய்தனர். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வோம். பாஜக ஆட்சியில் 10க்கும் மேற்பட்ட அரசுத் தேர்வுகளில் வினாத்தாள் கசிவு நடந்துள்ளது. அரசியலமைப்புச் சட்டத்துக்கும், நம் வாழ்வுக்கும் பாஜக அச்சுறுத்தலாக இருப்பதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். அவர்கள் அரசியலமைப்பை மாற்ற விரும்புகிறார்கள்” என்றார்

அகிலேஷ் யாதவ்

சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவரும், அகிலேஷ் யாதவின் சித்தப்பாவுமான ஷிவ்பால் யாதவின் மகன் ஆதித்யா யாதவுக்கு புடவுன் தொகுதியில் வாக்களிக்குமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார் அகிலேஷ் யாதவ். மக்களவைத் தேர்தலின் மூன்றாம் கட்டமாக மே 7ஆம் தேதி புடவுனில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

x