பாஜகவில் இணைந்தார் மணிஷ் காஷ்யப்; போலி வீடியோ பரப்பி கைதான யூ-ட்யூபர்!


பாஜகவில் இணைந்த மணீஷ் காஷ்யப்

தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பொய் செய்தி பரப்பி சிறையில் அடைக்கப்பட்டு இருந்த யூடியூபர் மணிஷ் காஷ்யப் இன்று பாஜகவில் இணைந்தார்.

கடந்த 2022ம் ஆண்டு புலம்பெயர் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக வீடியோ ஒன்று வைரலாக பரவியது. இது தொடர்பாக தமிழ்நாடு போலீஸாரும், பீகார் மாநில போலீஸாரும் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது பீகாரைச் சேர்ந்த பிரபல யூடியூபரான மணிஷ் காஷ்யப் என்பவர் தனியாக ஸ்டுடியோ ஒன்றை அமைத்து இது போன்ற போலி வீடியோக்களை உருவாக்கி, அதனை இணையத்தில் பரப்பி வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து அவரை தமிழ்நாடு போலீஸார் கைது செய்து மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இதனிடையே இது தொடர்பாக பீகார் மாநிலத்திலும் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. அவர் மீது இருந்த 19 வழக்குகளும் ஒன்றாக இணைக்கப்பட்டு பீகார் மாநிலத்தில் விசாரிக்கப்படும் என முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த காஷ்யப்பிற்கு கடந்த டிசம்பர் மாதம் பாட்னா உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

பாஜகவில் இணைந்த மணீஷ் காஷ்யப்

ஜாமீனில் வெளிவந்த காஷ்யப், முதலமைச்சர் நிதிஷ் குமார், முன்னாள் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் ஆகியோரை கடுமையாக விமர்சித்து வந்தார். ஆனால், பாஜகவுடன் கூட்டணி அமைத்த பிறகு, நிதிஷ் குமாரை விமர்சிப்பதை அவர் தவிர்த்து வந்தார். தற்போது நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பம் தெரிவித்திருந்தார். பீகார் மாநிலத்தில் உள்ள மேற்கு சம்ப்ரான் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட அவர் முடிவு செய்திருந்தார்.

மணீஷ் காஷ்யப் மதுரை சிறையில் அடைக்கப்பட்ட போது (கோப்பு படம்)

இந்நிலையில் பாஜகவின் தீவிர ஆதரவாளராக அடையாளம் காணப்பட்ட அவர், இன்று காலை 11 மணியளவில் டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்திற்கு தனது தாயாருடன் வருகை தந்தார். தொடர்ந்து பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான மனோஜ் திவாரி முன்னிலையில் அவர் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். தொடர்ந்து பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். மணிஷ் காஷ்யப்பிற்கு, பாஜக சார்பில் பீகார் மாநில மேலவையில் உறுப்பினர் பதவி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் வாசிக்கலாமே...

x