ராஜஸ்தானில் பிரதமர் மோடியின் இஸ்லாமியர்கள் குறித்த பேச்சுக்கு அதிருப்தி தெரிவித்த ஜெய்ப்பூர் பாஜக சிறுபான்மை அணித் தலைவர் உஸ்மான் கனி கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி சில நாட்களுக்கு முன்பு ராஜஸ்தானில் பிரச்சாரம் செய்த போது இஸ்லாமியர்கள் குறித்து விமர்சித்தது பெரும் விவாதமாக மாறி உள்ளது.
கடந்த ஞாயிறு அன்று ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பேசிய பிரதமர் மோடி, " காங்கிரஸ் சார்பில் முன்பு பிரதமராக இருந்த மன்மோகன் சிங் நாட்டின் சொத்துகளில் முஸ்லிம்களுக்கே முதல் உரிமை என்று கூறியிருந்தார். நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம், ஊடுருவல்காரர்களுக்கே போக வேண்டுமா?” என்று பிரதமர் மோடி பேசியது பெரும் சலசலப்பை உருவாக்கியுள்ளது.
பிரதமர் மோடியின் இந்த பேச்சு மதுவெறுப்பின் உச்சம் என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளதுடன், தேர்தல் ஆணையத்தில் தனித்தனியாக புகாரும் அளித்துள்ளன.
இந்நிலையில் ராஜஸ்தானில் பிரதமர் மோடியின் இஸ்லாமியர்கள் குறித்த பேச்சுக்கு அதிருப்தி தெரிவித்த ஜெய்ப்பூர் பாஜக சிறுபான்மை அணித் தலைவர் உஸ்மான் கனி கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக, ஜெய்ப்பூர் பாஜக சிறுபான்மை அணித் தலைவர் உஸ்மான் கனி, பிரதமர் மோடி பேச்சுக்கு அதிருப்தி தெரிவித்ததுடன், ராஜஸ்தானில் இந்த பேச்சு காரணமாக 3 முதல் 4இடங்களை பாஜக இழக்க உள்ளதாகவும், வாக்குச் சேகரிக்கும் போது, பிரதமர் மோடியின் பேச்சு குறித்து மக்கள் கேள்வி எழுப்புவதாகவும் கூறியிருந்தார். இதையடுத்து கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் உஸ்மான் கனி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.