தண்ணீர் தொட்டி உடைந்து விழுந்து விபத்து: தொழிலாளி பரிதாபமாக உயிரிழப்பு


சென்னை: சென்னை மதுரவாயல் அருகே உள்ள ஆலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் அமிர்தராஜ் (56). தொழிலாளி. இவர், வானகரம் பகுதியில் உள்ள ஒரு பிளாஸ்டிக் பொருள்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் நேற்று முன்தினம் வேலைக்குச் சென்றிருந்தார்.

அப்போது, அங்கு இரும்பு தூண்களின் மேல் கட்டப்பட்டிருந்த தண்ணீர் தொட்டியின் அருகே நின்று வேலை செய்து கொண்டிருந்துள்ளார். அப்போது தண்ணீர் தொட்டியை தாங்கி நின்ற இரும்பு தூண்கள் திடீரென வலுவிழந்து எதிர்பாராத விதமாக உடைந்தது.

இதனால், அதன் மேல் இருந்த தண்ணீர் தொட்டி உடைந்து கீழே விழுந்தது. இதில், அருகே நின்று வேலை செய்து கொண்டிருந்த அமிர்தராஜ் இடிபாடுகளில் சிக்கி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

தகவலறிந்து, மதுரவாயல் போலீஸார் சம்பவ இடம் விரைந்து அமிர்தராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.