அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜுவிட்டி, வீட்டு வாடகைப்படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட்டுள்ளதாக புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படிக்கான சீலிங் ரேட் மாற்றியமைத்து நிதித் துறை உத்தரவிட்டுள்ளது.இதன் மூலம் 6 வகையான அகவிலைப்படி 25 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மற்றும் ஜூலை மாதத்தினை கணக்கிட்டு ஆண்டிற்கு இருமுறை அகவிலை உயர்த்தப்படுகிறது.
மத்திய அரசின் உத்தரவைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு 7வது ஊதியக்குழு பரிந்துரையின் பேரில் 46 சதவீதமாக இருந்த அகவிலைப்படி, 4 சதவீதம் உயர்த்தி, 50 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது.
இந்த அகவிலைப்படி உயர்வு, ஜனவரி 1-ம் தேதி முதல் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.இதற்கிடையில் பல்வேறு அகவிலைப்படியின் சீலிங் ரேட்டினை மாற்றியமைத்து நிதித் துறை உத்தரவிட்டுள்ளது. பணியின்போது இறந்த அரசு ஊழியர்களுக்கான சீலிங் ரேட் 25 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதேபோல் போக்குவரத்துப்படி 25 சதவீதம் சீலிங் உயர்த்தப்பட்டுள்ளது. அதே போல வீட்டு வாடகைப்படியும் சீலிங் ரேட்டும் உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது எக்ஸ் பிரிவுக்கு 27 சதவீதம், ஒய் பிரிவுக்கு 18, இசட் பிரிவுக்கு 9 சதவீதமாக உள்ளது.தற்போது, எக்ஸ் பிரிவுக்கு 30,ஒய் பிரிவுக்கு 20 சதவீதம்,இசட் பிரிவுக்கு 10 சதவீதமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கான படிப்பு அகவிலைப்படி தொகை மாதம் 2,250 ரூபாய், ஓட்டல் சப்ஸிடி 6,750 ரூபாய், மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான கல்வி அகவிலைப்படி 4,500 ரூபாயாக தற்போது உள்ளது. இவையும் 25 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோல், 3 ஆயிரம் ரூபாயாக இருந்த மாற்றுதிறனாளி பெண் ஊழியர்களுக்கான அகவிலைப்படியும்,உடைக்கான ட்ரஸ் அகவிலைப்படியும் 25 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றியமைக்கப்பட்ட அகவிலை உயர்வு 01.01.2024 முதல் அமலுக்கு வருவதாக தெரிவித்துள்ள நிதித்துறை சார்பு செயலர் சிவக்குமார், இதுதொடர்பாக அனைத்து துறைகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.