தகிக்கப்போகிறது தமிழ்நாடு... வானிலை ஆய்வு மையத்தின் வெப்ப அலை எச்சரிக்கை


வெப்ப அலை பாதிப்பு

தமிழ்நாடு உட்பட 5 மாநிலங்களுக்கு வெப்ப அலைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தை ஒட்டி ஏற்கனவே அரசியல் அனல் நாட்டை வாட்டி வதைத்து வருகிறது. இதன் மத்தியில் மெய்யாலுமே வெப்ப அலையும் சேர்ந்து, நண்பகலில் வெளியே தலைகாட்டுவோரை இம்சித்து வருகிறது. இதனிடையே, இந்த வெப்ப அலைக்கான அதிகாரபூர்வ எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையமும் அதிகாரபூர்வமாக அறிவுறுத்தி உள்ளது.

வெயில்

தமிழ்நாடு, மேற்கு வங்கம், ஒடிசா, உத்தரபிரதேசம், ஜார்க்கண்ட் ஆகிய 5 மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை தென்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று அறிவிப்பு வெளியிட்டது.

இதுவே தமிழ்நாட்டில் குறிப்பாக வட தமிழக மாவட்டங்களில் இந்த வெப்ப அலை தாக்கம் அதிகரித்திருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட இன்னொரு தகவல் தெரிவிக்கிறது. இதன்படி ஏப்ரல் 22 முதல் 26 வரையிலான 5 தினங்களுக்கு தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இயல்பைவிட ஓரிரு டிகிரி வெப்பநிலை கூடுதலாக தென்படும்.

அதிகபட்ச வெப்பநிலை என்பது, வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் குறிப்பாக சமவெளி பகுதிகளில் வெப்ப அலை அதிகரித்து காணப்படும். இந்த இடங்களில் வெப்ப நிலையானது 39 முதல் 41 வரையிலான டிகிரி செல்ஷியஸ் என்றளவில் உயர்ந்து காணப்படும். இந்த அறிவிப்பில் இடம்பெறாத இதர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் 34 - 38 டிகிரி செல்ஷியஸில் வெப்பநிலை உயர்ந்து காணப்படும்.

வெயில்

வெப்ப அலை வீசுவது, காற்றில் ஈரப்பதம் வெகுவாய் குறைவது, வெயிலின் உக்கிரம் ஆகியவை, குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயுற்றுவர்களை பாதிக்கக்கூடியதாகும். எனவே நண்பகல் நேரத்தில் இவர்கள், வெயிலில் அலைவதை தவிர்ப்பது நல்லது. ஏனையோரும், கோடை வெயிலுக்கு உகந்த ஆடைகள் முதல் உணவு ரகங்கள் வரை மாற்றங்களை நடைமுறைப்படுத்துவது, வெப்ப அலை வீச்சியின் உக்கிரத்தை தணிக்க உதவக்கூடும்.

x