ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் அதிசய பிரம்ம கமலம் மலர் கோவை அருகே பூத்துள்ளது. இதனை பலரும் ஆர்வத்துடன் பார்த்து ரசித்து செல்கின்றனர்.
உத்தரகண்ட் மாநில மலராகவும், இமயமலைப் பகுதிகளில் மட்டுமே காணப்படும் அதிசய மலராகவும் உள்ளது பிரம்ம கமலம். இளவேனில் காலத்தில் மாலை 7 மணிக்கு மேல் இரவு நேரத்தில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும். இந்த பூ மலரத் தொடங்கிய நேரத்திலிருந்து 2 மணி நேரத்துக்கு பிறகே முழுமையாக மலரும். அதிகாலைக்குள் உதிா்ந்து விடும் என்றாலும் இந்தப் பூவின் வாசம் அந்த பகுதி முழுவதும் வீசும்.
இந்த மலரின் செடி கள்ளிச்செடி வகையைச் சோ்ந்தது என கூறப்படுகிறது. உலக வெப்பநிலை மாறுபாட்டால் அழிந்து வரும் இந்த தாவரத்தை பாதுகாக்க உத்தரகண்ட் மாநில அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இத்தகைய அபூா்வ பிரம்ம கமலம் பூ கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள பொகளூர் மாரியம்மன் கோயில் பூசாரி முத்துசாமி வீட்டில் 3 ஆண்டுகளாக வளா்க்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த செடியில் 1 மொட்டு சில தினங்களுக்கு முன்னா் வந்துள்ளது.
இதனிடையே நேற்று காலை முதல் மொட்டு மலர தொடங்கிய நிலையில் நள்ளிரவு பிரம்ம கமலம் மலா் வெண்ணிலவைப்போல் காட்சியளித்தது. இதனையடுத்து பூசாரி முத்துச்சாமி குடும்பத்தினர் விளக்கேற்றி வழிபட்டனர். இதையறிந்த அப்பகுதி பொதுமக்கள் பலா் திரண்டு வந்து ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர்.