ஹைதராபாத் பாஜக வேட்பாளரான மாதவி லதா என்பவர், மசூதியை நோக்கி அம்பு விடுவது போன்று அபிநயம் பிடித்ததில் சர்ச்சைக்கு ஆளாகியுள்ளார்.
ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி ஹைதராபாத் மக்களவைத் தொகுதி எம்பியாக உள்ளார். இவருக்கு முன்னதாக இந்த தொகுதியின் எம்பியாக இவரது தந்தை இருந்தார். இந்த வகையில் சுமார் 40 ஆண்டுகளாக ஹைதராபாத் தொகுதி ஒவைசி குடும்பத்தார் வசமிருக்கிறது. அதனை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில், உள்ளூர் பிரபலமான மாதவி லதா என்ற பெண் மருத்துவரை பாஜக நிறுத்தியுள்ளது.
தொழில்முறை பரதநாட்டியக் கலைஞரான மாதவி லதா, ஹைதராபாத்தில் இஸ்லாமியர் உட்பட பலதரப்பிலும் செல்வாக்கு மிக்கவர். இத்துத்துவ கருத்துக்களில் ஈடுபாடு கொண்ட இவரை, பாஜக உறுப்பினராவதற்கு முன்னரே வேட்பாளராக அக்கட்சி அறிவித்தது. அதிலும் சமூக ஊடகம் வாயிலாக பிரதமர் மோடியே முன்மொழிந்ததில், ஒரே இரவில் மாதவி லதா நாடறியப்பட்ட பிரபலமானார்.
ஆனால், இன்னொரு வைரல் பதிவு காரணமாக மீண்டும் ஒரே இரவில் பெரும் சர்ச்சைக்கும் ஆளாகி இருக்கிறார். ஹைதராபாத் பாஜக வேட்பாளரான மாதவி லதா அங்கு நேற்றிரவு நடைபெற்ற ராம நவமி விழாவில் பங்கேற்றார். அது தொடர்பாக ஊர்வலம் ஒன்றில் வலம் வந்தபோது, மாதவி லதா அபிநயம் பிடித்த விதம் சர்ச்சைக்கு தூபமிட்டுள்ளன.
கைகளில் வில், அம்பு பிடித்திருப்பது போல பாவனை செய்யும் மாதவி லதா அதனை தொலைவிலிருக்கும் இலக்கு நோக்கி ’எய்கிறார்’. அதனை பதிவு செய்யும் கேமரா, அம்பின் திசை மற்றும் இலக்காக மசூதி ஒன்றை சுட்டிக்காட்டுகிறது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதில், ஹைதராபாத்தின் பாஜக வேட்பாளருக்கு எதிராக கண்டனங்கள் குவித்தன.
இதனையடுத்து, இந்த செய்கை மற்றும் வைரல் வீடியோ குறித்து விளக்கமளித்த மாதவி லதா, மன்னிப்பும் கோரியிருக்கிறார். ”அது முழுமை பெறாத வீடியோ ஒன்றின் சிறு பகுதி மட்டுமே. அந்த வகையில் தவறாக பொருள் கொள்ளப்பட்டிருக்கிறது. அனைத்து தரப்பினரையும் நான் மதிக்கிறேன். எனினும் எவருடைய உணர்வுகளையேனும் எனது செய்கை புண்படுத்தியிருப்பின் அதற்காக மன்னிப்பு கோருகிறேன்” என்று விளக்கி உள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...