''எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் என்று பாஜகவில் இருந்து சொன்னால் அதிமுகவினர் ஏற்றுக் கொள்வார்களா'' என்று முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கேள்வி எழுப்பினார்.
நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், பாஜக மற்றும் அதிமுக இடையிலான கூட்டணியில் முறிவு ஏற்பட்டுள்ளது. பாஜகவுடன் இனி எப்போதும் கூட்டணி இல்லை என அதிமுக திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் தனது ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் இன்று ஆலோசனை நடத்தினார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், புகழேந்தி, வெல்லமண்டி நடராஜன், மருது அழகுராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதன் பின்னர் செய்தியாளர்களை ஓபிஎஸ் அணியினர் சந்தித்தனர்.
அப்போது பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், அதிமுக தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளோம். சட்ட போராட்டம் ஒருபுறமும் மக்களை சந்திப்பது மறுபுறமும் தொடரும். பழனிசாமியை நம்ப முடியாது என்று நாங்கள் சொல்லி வந்த நிலையில் தமிழ்நாடு மட்டுமின்றி அகில இந்திய அளவிலும் வெளிப்படுத்தி இருக்கிறார் என்பதை நீங்கள் அறிவீர்கள். நம்பிக்கைக்குரியவர் ஓபிஎஸ். இது நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல் நம்பகத்தன்மை அற்றவர் யார் என்பதை இந்த நாடும் இந்த உலகமும் அறியும்" என்றார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்கள், நீங்கள் பாஜக கூட்டணியில் இருக்கிறார்களா என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த பண்ருட்டி ராமச்சந்திரன், அதை நீங்கள் பாஜகவிடம் தான் கேட்க வேண்டும் என்றார். நாடாளுமன்றத் தேர்தலில் உங்களுடைய ஆதரவு யாருக்கு என்ற கேள்விக்கு, தேர்தல் வரட்டும் என்றார். எங்களை பொறுத்தவரையில் நாங்கள் என்ன முடிவு எடுத்தோமோ அதே பாதையில் சென்று கொண்டிருக்கிறோம். பாஜக என்ன செய்யப் போகிறது என்று எங்களுக்கு தெரியாது. பாஜக என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பதை பொறுத்து நாங்கள் முடிவெடுப்போம் என்றார்.
பாஜகவில் இருந்து உங்களிடம் பேசினார்களா என்ற கேள்விக்கு ஓ.பன்னீர்செல்வம் அளித்த பதிலில், கடந்த ஒருமாத காலமாக பாரதிய ஜனதா கட்சியிலிருந்து தினந்தோறும் எங்களை தொடர்பு கொண்டு இருக்கிறார்கள் என்றார். உங்களை தொடர்பு கொள்வது மாநிலத் தலைமையா அல்லது மத்திய தலைமையா என்ற கேள்விக்கு, மத்திய தலைமையில் இருந்து பேசுகிறார்கள் என்றார். டெல்லி சென்று அமித்ஷாவையும், நட்டாவையும் சந்திப்பீர்களா என்ற கேள்விக்கு, படிப்படியாக நல்ல நிகழ்வுகள் நடைபெறும் என்றார். கூட்டணி உங்கள் தலைமையில் இருக்குமா என்ற கேள்விக்கு, வரப்போகிறது நாடாளுமன்ற தேர்தல். நாட்டை யார் ஆள வேண்டும் என்பதற்கான தேர்தல். தேசம் முழுவதும் இயக்கத்தை நடத்திக் கொண்டு இருப்பவர்கள் தான் இந்தியாவை ஆள முடியும் என்ற சூழ்நிலை இருக்கிறது. பாஜக நாட்டை இரண்டு முறை ஆண்டு இருக்கிறது. மூன்றாவது முறையும் அது ஆள்வதற்குரிய தகுதியை பெற்றிருக்கிறது. அவர்கள் தங்கள் முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவித்த பிறகு தான் எங்கள் முடிவை நாங்கள் அறிவிப்போம் என்றார்.
அதிமுக- பாஜக கூட்டணி முறிவு ஒரு நாடகம் என்று திமுகவினர் கூறுகிறார்களே என்ற கேள்விக்கு, நீங்களே (பத்திரிகையாளர்களை பார்த்து) கூறுகிறீர்கள். 16 மாநிலங்களில் ஆண்டு கொண்டிருக்கிற ஒரு தேசிய கட்சி. என்டிஏ கூட்டணியில் பிரதமர் பக்கத்திலேயே எடப்பாடி பழனிசாமியை உட்கார வைத்துக்கொண்டு அறிவித்திருக்கிறார்கள். அப்படி அறிவித்த பாஜக தலைமைக்கு தொடர்ந்து நம்பிக்கை துரோகத்தை யார் செய்து வருகிறார் என்பது நாட்டு மக்களுக்கு நன்கு தெரியும். தமிழ்நாட்டுக்கு நாங்க தான் தலைமை என்று எடப்பாடி பழனிசாமி சொன்ன பிறகு தான் பிரச்சினை ஆரம்பித்தது. கூட்டணி கட்சிகளுடன் பேசும்போது அறிந்து பேச வேண்டும் என்றார்.
அண்ணாமலையை மாற்ற வேண்டும் என்று அதிமுகவிலிருந்து குரல் எழும்பியது குறித்த கேள்விக்கு, எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் என்று பாஜகவில் இருந்து சொன்னால் அதிமுகவினர் ஏற்றுக் கொள்வார்களா. ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவரை மாற்றச் சொல்ல அவர்களுக்கு என்ன அருகதை இருக்கிறது என்றார் கோபத்துடன்.