ராஜஸ்தான் மாநிலம் டோங்க் மாவட்டத்தின் பாஜக தேர்தல் பொறுப்பாளராக அக்கட்சியின் எம்பி ரமேஷ் பிதுரி நியமிக்கப்பட்டிருப்பதை ‘வெறுப்பு பேச்சுக்கான வெகுமதி’ என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளன.
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் கடந்த 18-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் கடந்த 21-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தொடரில், சந்திரயான் 3 வெற்றிக்காக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டும் வகையில் விவாதம் நடைபெற்றது. இதில் அனைத்து கட்சி எம்.பிக்களும் தங்கள் உரையை நிகழ்த்தினர். அப்போது பாஜக எம்.பி பிற கட்சி எம்.பியை தரக்குறைவாக பேசினார்.
அதாவது பாஜக எம்.பியான ரமேஷ் பிதூரி, பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி டேனிஷ் அலியை நோக்கி, 'ஏய்.. இஸ்லாமிய தீவிரவாதி' என்றும், 'பயங்கரவாதி' என்றும் பேசினார். மேலும் ஆபாச வார்த்தைகளில் அருவருக்கத்தக்க வகையிலும் பேசினார். நாடாளுமன்றத்தில் பாஜக எம்.பி அனைவர் முன்பும் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியது அனைவர் மத்தியிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
தொடர்ந்து பிதூரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பகுஜன் சமாஜ் எம்.பி டேனிஷ் அலி, பாஜக எம்.பி அவ்வாறு பேசியதால், தான் இரவு முழுவதும் தூங்கவில்லை என்றும், அது தன்னை மிகவும் பாதித்தது என்றும் கண்கலங்கி பேட்டியளித்தார்.
பாஜக எம்.பி பிதுரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவருக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சி எம்.பி-க்கள் வலியுறுத்தி வரும் நிலையில், தற்போது அவருக்கு பாஜக தேர்தல் பொறுப்பை வழங்கியுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் ராஜஸ்தானில் சட்டமன்ற தேர்தல் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.
இந்த சூழலில் ராஜஸ்தான் மாநிலம் டோங்க் மாவட்டத்தின் பாஜக தேர்தல் பொறுப்பாளராக, ரமேஷ் பிதூரி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு எதிர்க்கட்சிகள், இணையவாசிகள், பொதுமக்கள் என பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், "நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வில் பகுஜன் சமாஜ் எம்.பி டேனிஷ் அலியை, தகாத வார்த்தைகளால் பேசிய பாஜக எம்.பி ரமேஷ் பிதுரிக்கு வெகுமதி அளிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானின் டோங்க் மாவட்டத்தில் முஸ்லிம் மக்கள் தொகை 29.25% இருக்கும் நிலையில், அங்கே பாஜக பொறுப்பாளராக பிதூரி நியமிக்கப்பட்டுள்ளார். அரசியல் பலன்களுக்கான "வெறுப்பை" பாஜக அடையாளப்படுத்துகிறது!" என்று குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.
திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா, "இது தெரிந்தது தான். ரமேஷ் பிதூரி, நாடாளுமன்றத்தில் இஸ்லாமிய எம்.பி.யை, தகாத வார்த்தைகளால் அழைத்ததற்கான வெகுமதி. இப்படி பட்ட நபருக்கு பொறுப்பு வழங்கியுள்ளது தான், சிறுபான்மையினருக்கான நீங்கள் காட்டும் பாச யாத்திரையா?" என்று குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.