சென்னை தியாகராயர் நகரில் சாலையில் இன்று அதிகாலை திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தியாகராயர் நகர் சாலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் அளவில் 10 அடி ஆழம் ,3 அடி அகலத்திற்கு பெரிய பள்ளம் ஏற்பட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் போக்குவரத்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அங்கு வந்த போலீஸார் உடனடியாக பள்ளத்தை சுற்றி தடுப்புகள் அமைத்து சென்னை குடிநீர் வாரியம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். மேலும் அந்த பகுதியை ஒரு வழி சாலையாக மாற்றி பைக் மற்றும் கார்களுக்கு மட்டும் அனுமதி அளித்தனர்.
பின்னர் நிகழ்விடத்திற்கு வந்த குடிநீர் வாரியம் மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அந்த இடத்தை ஆய்வு செய்து பொக்லைன் இயந்திரத்தை வரவழைத்து பள்ளத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பள்ளத்தை முழுமையாக தோண்டி ஆய்வு செய்த பிறகு, காரணம் தெரியவரும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாலையின் கீழே கழிவுநீர் குழாய், குடிநீர் குழாய் போன்றவை செல்கின்றன. எனவே, பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி, ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.