தொடர் விடுமுறை காரணமாக பலரும் ஊருக்கு சென்றதாலும், மீண்டும் இன்னொரு முழு அடைப்பு போராட்டம் நடைப்பெற உள்ளதாலும் நேற்று இரவு பெங்களூரு நகரம் வாகனங்களால் ஸ்தம்பித்தது.விடிய விடிய மக்கள் பெங்களூருவை விட்டு வெளியேற துவங்கினார்கள்.
ஐடி ஊழியர்கள் அதிகம் பணியாற்றும் பெங்களூருவின் அவுட்டர் ரிங் ரோடு பகுதியில் சுமார் 3.5 லட்சம் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வெளியேற முடியாமல் தவித்தன. வழக்கமான நாளை விட மூன்று மடங்கு அதிக வாகனங்கள் நேற்று அந்த வழியே வந்ததே இந்தகையை போக்குவரத்து நெரிசலுக்கு காரணம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக புதன்கிழமைகளில் 1.5 லட்சம் முதல் 2 லட்சம் வாகனங்கள் வரை சாலையில் பயணிக்கும். ஆனால் நேற்று இரவு 7.30 மணிக்கு சுமார் 3.5 லட்சம் வாகனங்கள் சாலையில் இருந்ததாக பெங்களூரு போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நீண்ட விடுமுறை வருவதாலும், இன்னொரு முழு அடைப்பு போராட்டம் நடைப்பெற இருப்பதாலும் பலரும் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பினர்.
அதே போல் மாலை நேரத்தில் திடீரென மழை பெய்ததும், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட காரணமாக கூறப்படுகிறது. வாகன நெரிசலில் சிக்கிய மக்கள் பலரும் தங்கள் வேதனையை எக்ஸ் தளத்தில் பதிவு செய்தனர்.