வன்னிய சமுதாயத்தை ஏமாற்றி பிழைப்பு நடத்தும் அன்புமணி குடும்பம்... சி.வி.சண்முகம் கடும் தாக்கு!


பாக்யராஜுக்காக வாக்கு சேகரிக்கும் சி.வி.சண்முகம்

”வன்னிய சமுதாயத்தை ஏமாற்றி பிழைப்பு நடத்தும் அன்புமணிக்கு அதிமுகவை பற்றிப் பேச எந்த தகுதியும் கிடையாது” என அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கடுமையாக தாக்கிப் பேசியுள்ளார்.

அன்புமணி ராமதாஸ்

மக்களவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நாளை மறுதினம் தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் 102 தொகுதிகளில் நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகளின் தலைமையில் மூன்று கூட்டணிகளும் நாம் தமிழர் கட்சியும் போட்டியிடுகிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக மற்றும் பாஜக இடையே கடுமையான கருத்து மோதல்கள் நடைபெற்று வருகிறது. அதேபோல அதிமுக மற்றும் பாமக இடையே வார்த்தைப் போர் நடைபெற்று வருகிறது. “பாமக தயவில் தான் அதிமுக ஆட்சி தொடர்ந்தது” என்று பாமகவினரும், ”அதிமுக தயவில்தான் அன்புமணி எம்பி ஆனார்” என்று அதிமுகவினரும் பேசி வருகின்றனர்.

சி.வி.சண்முகம்

இந்த நிலையில், அன்புமணி ராமதாஸ் வன்னிய சமூகத்தை ஏமாற்றி அரசியல் செய்து வருவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கடுமையாக குற்றச்சாட்டை வைத்திருக்கிறார்.

விழுப்புரம் தொகுதி அதிமுக வேட்பாளர் பாக்யராஜை ஆதரித்து இன்று பிரச்சாரம் செய்த அவர் "அதிமுகவை எங்கு பார்த்தாலும் துரோகம் செய்துவிட்டதாக அன்புமணி விமர்சிக்கிறார். அன்று என் வீட்டிற்கு இட ஒதுக்கீட்டிற்காக வந்தவர் அன்புமணி. இன்று வழக்கிற்காக பாஜகவுக்குப் பயந்து எங்களை விமர்சிக்கிறார். நன்றி கெட்டவர் என்பதற்கு உதாரணம் அன்புமணி.

வன்னிய மக்களை வைத்து அரசியல் பிழைப்பு நடத்துகிற குடும்பம் அன்புமணியின் குடும்பம். கடந்த 2006-ம் ஆண்டிலேயே உங்களைப் பார்த்தவன் இந்த சண்முகம். நீங்கள் கொலைகார குடும்பம், நன்றி கெட்ட குடும்பம்" என்று கடுமையாக தாக்கினார்.

x