சிவகாசி அலுமினிய சீவு தூள் ஆலை வெடி விபத்தில் காயமடைந்த பெண் உயிரிழப்பு


செங்கமலப்பட்டி அலுமினிய பேப்பர் சீவுத்தூள் நிறுவனத்தில் ஏற்பட்ட வெடி வபத்தில் தரைமட்டமான தகர செட்.

சிவகாசி: சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் அலுமினியம் பேப்பர் தூள் ஆலையில் கடந்த 5-ம் தேதி ஏற்பட்ட வெடி விபத்தில், காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சிவகாசி திருமேனி நகரைச் சேர்ந்த சின்ன கருப்பு மகன் ராஜபாண்டி. இவர் சிவகாசி அருகே செங்கமலப்பட்டி - நாரணபுரம் சாலையில் பெரியாண்டவர் அலுமினிய பேப்பர் தூள் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் கடந்த 5-ம் தேதி பெய்த மலையில் சேதமடைந்த தகர செட்டை சீரமைக்க வெல்டிங் வைத்த போது, தீப்பொறிப்பட்டு வெடி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் அங்கு பணியாற்றிய சின்ன கருப்பு (44), மீரா காலனியை சேர்ந்த வீரலட்சுமி (28) மற்றும் வெல்டிங் வேலைக்கு வந்த நாரணாபுரத்தை சேர்ந்த மகேந்திரன் (26), சதீஷ்குமார் (27), திருப்பதி நகரை சேர்ந்த அன்புராஜ் (27) ஆகியோர் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் 60 சதவீதம் தீக்காயமடைந்த வீரலட்சுமி, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வீரலட்சுமி, சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.

போலீஸ் விசாரணையில் அலுமினிய பேப்பர் தூள் ஆலையில் அனுமதி இன்றி சட்ட விரோதமாக பட்டாசு உற்பத்தி செய்ததால் வெடி விபத்து ஏற்பட்டது தெரிய வந்துள்ளது. இதையடுத்து சிவகாசி கிழக்கு போலீஸார் ராஜபாண்டி மீது வெடிபொருள் பாதுகாப்புச் சட்டம் உட்பட 3 பிரிவுகளின் வழக்கு பதிவு செய்தனர்.