அரசியல் கட்சிகள் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தப்படும் ஹெலிகாப்டர், விமானம் குறித்த தகவல்களை 24 மணி நேரத்துக்கு முன்னதாக தெரிவிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்தும் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் குறித்த விவரங்கள், அவை புறப்பட்ட இடம், சென்றடைந்த இடம், அவற்றில் பயணித்த நபர்களின் எண்ணிக்கை போன்ற அனைத்து விவரங்களையும் தெரிவிக்க வேண்டியது அவசியம் என இந்திய தேர்தல் ஆணையம், அரசியல் கட்சிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், மும்பை புறநகர் மாவட்ட துணைத் தேர்தல் அதிகாரி தேஜாஸ் சாமெலின் ஏப்ரல் 12-ம் தேதியிட்ட கடிதத்தில், ‘மாவட்டத் தேர்தல் அலுவலகத்துக்குச் பிரச்சாரம் செல்வதற்கு 3 நாட்களுக்கு முன்பு இத்தகைய தகவல்களை வழங்க வேண்டும் என்பது விதி.
இந்நிலையில் தற்போது இந்த கால அவகாசமானது 3 நாள்களிலிருந்து 24 மணி நேரமாகக் குறைக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகளின் கீழ் இந்த தகவல் வழங்கப்பட வேண்டும். இது தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்படும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தேஜாஸ் சாமெல் நேற்று இரவு செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஏப்ரல் 17-ம் தேதி ஒரு திருத்தப்பட்ட கடிதத்தை அனுப்ப உள்ளோம்.
அதன்படி, அரசியல் கட்சிகள் மூன்று நாட்களுக்கு பதிலாக, 24 மணி நேரத்துக்கு முன்பு விமானம், ஹெலிகாப்டர் பயன்பாடு குறித்து தெரிவிக்க வேண்டும். அந்தத் தகவலில் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தப்படும் ஹெலிகாப்டர், விமானம் மற்றும் அவற்றில் பயணிக்கும் நபர்கள் குறித்த தகவல்களை தெரிவிக்க வேண்டும்.” என்றார்.
48 தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிராவில் மக்களவைத் தேர்தல் வரும் 19-ம் தேதி முதல் மே 20 வரை 5 கட்டங்களாக நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாமே...
இந்த 5 தொகுதிகளில் வெற்றி இழுபறி!
தமிழ்நாட்டின் மிகப்பெரிய சந்தைக்கு 2 நாட்கள் விடுமுறை... தேர்தலை முன்னிட்டு அறிவிப்பு!