[X] Close

‘தூய்மை இந்தியா’ திட்ட விழிப்புணர்வுக்காக கோவையிலிருந்து கொச்சிக்கு சைக்கிள் பேரணி


swacch-bharat-cycle-rally

‘தூய்மை இந்தியா’ திட்ட விழிப்புணர்வுக்காக கோவையிலிருந்து கொச்சிக்கு சென்ற சைக்கிள் பேரணியில் பங்கேற்றோர். படம்: ஜெ.மனோகரன்

  • kamadenu
  • Posted: 25 Oct, 2018 12:30 pm
  • அ+ அ-

கோவை

`தூய்மை இந்தியா’ திட்டம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கோவையிலிருந்து கொச்சிக்கு சைக்கிள் பேரணி நேற்று தொடங்கியது.

தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக, `பெடல் ஃபார் கிளீன் இந்தியா` என்ற இந்தப் பேரணி கோவை வ.உ.சி. பூங்காவில் தொடங்கியது.

இதில், 150-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். கோவையில் தொடங்கிய பேரணி, கேரள மாநிலம் பாலக்காடு, ஒற்றப்பாலம், திருச்சூர், இருஞ்சாலக்குடா வழியாக கொச்சி அருகேயுள்ள நெடுமச்சேரி சர்வதேச விமான நிலைய வளாகத்தில் நிறைவடைகிறது. ஏறத்தாழ 200 கிமீ தொலைவுக்கு சைக்கிள் விழிப்புணர்வுப் பேரணி நடைபெறுகிறது.

இதுகுறித்து `பெடல் ஃபார் கிளீன் இந்தியா` திட்டத் தலைவர் ஏ.காட்வின் மரிய விசுவாசம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கடந்த ஆண்டு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சைக்கிள் பேரணி நடைபெற்றது. 2019-ல் மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளைக் கொண்டாடும் தருணத்தில், தூய்மையான இந்தியாவை உருவாக்குவதே அவருக்கு அஞ்சலி செலுத்துவதாக அமையும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு அக். 2-ம் தேதி அவர் தொடங்கிவைத்த தூய்மை இந்தியா இயக்கம் தற்போது நாடு முழுவதும் தேசிய இயக்கமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சைக்கிள் ஓட்டுவதன் மூலமாக பல்வேறு உடல் உபாதைகளில் இருந்து இளைஞர்களும், முதியவர்களும் விடுபட முடியும். மேலும், சைக்கிள் பயன்பாடு சுற்றுப்புறம் மாசுபடுவதை தடுப்பதுடன், எரிபொருள் சேமிப்புக்கும் உதவும். ஆரோக்கியமான உடல்நிலையைப் பேணிக் காக்க அனைத்துத் தரப்பு மக்களும் சைக்கிள் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும்.

இப்பேரணியில் பங்கேற்றுள்ள 150-க்கும் மேற்பட்டோர், தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வுப் பிரசுரங்களை பொதுமக்களிடம் விநியோகிப்பர். மேலும், ஒரு வாரத்துக்கு கோவை வஉசி பூங்காவில் `தூய்மை இந்தியா` திட்ட விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்படும். இதில் பொதுமக்கள் பங்கேற்று, உறுதிமொழி ஏற்கும் படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யலாம்` என்றார்.

விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை மாநகராட்சி தனி அலுவலர் கே.விஜயகார்த்திகேயன் கொடியசைத்து தொடங்கிவைத்தார். அதிவிரைவுப் படையின் 105 பட்டாலியன் அதிகாரிகள், சர்வதேச ரோட்டரி இயக்குநர் ராஜதுரை மைக்கேல், ரோட்டரி ஆளுநர் ஏ.வி.பதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முன்னதாக, கோவை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற 2.5 கிமீ வாக்கத்தான் நடைபயணத்தில் 250-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close