[X] Close

இந்தியாவிலேயே முன்மாதிரியான முயற்சி; சாலை விபத்துகளை தவிர்க்க உருவாகிறது ‘உயிர்’ அமைப்பு: கோவையில் வரும் 27-ம் தேதி தமிழக முதல்வர் தொடங்கிவைக்கிறார்


uyir-organisation

கோவையில் சாலை விபத்துகளை தவிர்க்கும் `உயிர்` அமைப்பு குறித்து விளக்கும் அதன் தலைவர் சஞ்சய் ஜெயவர்த்தனவேலு. அருகில், நிர்வாக அறங்காவலர் டாக்டர் ராஜசேகரன், நிர்வாகிகள் எம்.கிருஷ்ணன், விஜயமோகன், ராமசாமி. படம்: ஆர்.கிருஷ்ணகுமார்

  • kamadenu
  • Posted: 25 Oct, 2018 12:28 pm
  • அ+ அ-

கோவை

சாலை விபத்துகளால் நேரிடும் உயிரிழப்பு, உடல் ஊனம் ஆகியவற்றைத் தவிர்க்கும் வகையில், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக கோவையில் வரும் 27-ம் தேதி ‘உயிர்’ என்ற அமைப்பை தமிழக முதல்வர் தொடங்கிவைக்கிறார். முக்கியப் பிரமுகர்கள், தொழில் நிறுவனங்கள், அமைப்புகள், கல்வி, மருத்துவ நிறுவனங்கள் இணைந்து நாட்டிலேயே முன்மாதிரியாக இந்த அமைப்பு உருவாக்கியுள்ளன.

இது தொடர்பாக அமைப்பின் தலைவர் சஞ்சய் ஜெயவர்த்தனவேலு, நிர்வாக அறங்காவலர் டாக்டர் ராஜசேகரன், நிர்வாகிகள் எம்.கிருஷ்ணன், ரவி சாம், விஜயமோகன், ராமசாமி, ஜெயக்குமார் ராமதாஸ், பாலசுப்பிரமணியன் ஆகியோர் கோவையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

இந்தியாவில் அதிகம் பேர் உயிரிழக்க சாலை விபத்துகளே காரணம். கடந்த ஆண்டு 1,83,000 பேர் சாலை விபத்துகளால் உயிரிழந்துள்ளனர். அதிக சாலை விபத்துகள் நேரிடும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. ஆண்டுக்கு சுமார் 15,000 பேர் தமிழகத்தில் சாலை விபத்துகளால் இறக்கின்றனர்.

தமிழகத்தில் அதிக விபத்துகள் நேரிடும் நகரங்களில் கோவை இரண்டாவது இடம் வகிக்கிறது. போக்குவரத்து விதிகளை மீறுவது, மிதமிஞ்சிய வேகம், குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டுவதும் உள்ளிட்டவையே 70 சதவீத விபத்துகளுக்குக் காரணமாக உள்ளது. ஹெல்மெட் அணிவது, கார் சீட் பெல்டுகளை மாட்டிக்கொள்வது போன்ற அடிப்படை பாதுகாப்பு அம்சங்களைக்கூட கருத்தில் கொள்ளாத பயணிகளின் அலட்சியத்தால், மரணம், பெரும் காயங்கள், நிரந்தர ஊனம் ஆகியவை ஏற்படுகின்றன.

வாகன ஓட்டிகள், தங்களது பொறுப்பை உணர்ந்தால் மட்டுமே விபத்துகளைத் தடுக்க முடியும். இதை இயக்கமாக மாற்றி, விபத்துகளே இல்லாத கோவையை உருவாக்கும் நோக்கத்துடன் `உயிர்` அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

கோவையின் முக்கியப் பிரமுகர்கள், முதன்மையான பெரு நிறுவனங்கள், தொழிலகங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்களைச் சேர்ந்தோர் பலரும் இந்த அமைப்பில் இணைந்து பணியாற்றுகிறார்கள்.

‘உயிர்' அமைப்பின் தொடக்க விழா வரும் 27-ம் தேதி கோவை கொடீசியா தொழிற்காட்சி வளாகத்தில் நடைபெற உள்ளது. தமிழக முதல்வர் கே.பழனிசாமி ‘உயிர்' அமைப்பை தொடங்கிவைக்கிறார். அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இதில், `உயிர் காக்கும் புரிந்துணர்வு` ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுகிறது.

தொடர்ந்து, பொது நல அமைப்புகள், தொழில் அமைப்புகள், நிறுவனங்கள், கல்விநிலையங்கள், மருத்துவமனைகள், ஆன்மிக அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் ஒன்றிணைந்து `உயிர்ச் சேதம் தவிர்க்க எல்லா வகைகளிலும் ஒத்துழைப்போம்` என்று உறுதிமொழியேற்கின்றனர்.

`குட்டி காப்ஸ்`

சாலை விபத்துகளைத் தவிர்க்கும் விழிப்புணர்வை அதிகரிக்கும் வகையில், பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. பள்ளிகளில் செயல்படுத்த உள்ள ‘குட்டி காப்ஸ்’ என்ற திட்டத்தில், பள்ளிக் குழந்தைகள் வீட்டின் கண்காணிப்பு அதிகாரிகளாக செயல்பட்டு, பெற்றோர், உறவினர்கள் சாலை விதிகளை மீறும்போது, அவற்றை மதிக்குமாறு வலியுறுத்துவர். இதேபோல, கல்லூரிகள், தொழிற்சாலைகள், அலுவலகங்களிலும் விழிப்புணர்வை உண்டாக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்தியாவிலே சாலை விபத்துகள் இல்லாத நகரம் என்ற பெருமையை கோவைக்குத் தேடித்தருவதும், இங்கு வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களை பிற நகரங்களுக்கு விரிவுபடுத்துவதுமே ‘உயிர்' அமைப்பின் செயல்முறைத் திட்டம்.

இதையொட்டி, சாலைகளில் கண்காணிப்புக் கேமராக்கள், போக்குவரத்து சிக்னல்கள், மையத் தடுப்புகள் அமைத்தல், சாலைகள் சீரமைப்பு தொடர்பாக முறையிடுதல், சாலை பாதுகாப்புக்காக பிரத்தியேக செயலி உருவாக்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப் படும். தொடர்ந்து, விபத்துகளால் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் நடவடிக்கைகளும் இருக்கும். சாலை விபத்துகளைத் தடுப்பதற்காக இந்தியாவிலேயே முன்மாதிரியாக மேற்கொள்ளப்படும் இந்த முயற்சிக்கு, பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்

வாக்களிக்கலாம் வாங்க

'மிஸ்டர் லோக்கல்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close