புதுச்சேரியில் 15 சுகாதார ஆய்வாளர் பணியிடங்கள் காலி: கண்டுகொள்ளுமா அரசு?


புதுச்சேரி: பள்ளிக் குழந்தைகளுக்கு தடுப்பூசி தொடங்கி கொசு ஒழிப்பு வரை ஈடுபடும் சுகாதார ஆய்வாளர்களில் 35 பணியிடங்களில் 15 இடங்கள் காலியாகவுள்ளதால் சுகாதாரத் துறை நடவடிக்கை எடுக்குமா என கேள்வி எழுந்துள்ளது.

புதுச்சேரியில் ஒவ்வொரு ஆண்டும் பருவ மழைக்கு பின் டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், சுகாதாரத் துறையில் கொசுக்களால் பரவக்கூடிய டெங்கு உள்ளிட்ட நோய்களை கட்டுப்படுத்தும் வகையில் சுகாதாரத்துறை அதிகாரிகள், நகராட்சி, பொதுப்பணித்துறை, கல்வித்துறை உயரதிகாரிகளுடன் கூட்டம் நடத்துகின்றனர். ஆனால் பணிகள் மும்முரமாக நடக்கவில்லை.

இதுபற்றி சுகாதாரத்துறையில் விசாரித்தபோது, "கூட்டம் நடத்துவதால் மட்டும் டெங்கு நோயை கட்டுப்படுத்திவிட முடியாது. ‌ டெங்கு நோயை கட்டுப்படுத்தும் பணிகளை களத்தில் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும், அதுதான் நல்ல முடிவை தரும். எனவே டெங்கு நோயை கட்டுப்படுத்தும் பணிகளை மேற்பார்வை செய்யும் சுகாதார ஆய்வாளர் பணியிடங்களில் பெரும்பான்மையான பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே காலியாக உள்ள சுகாதார ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்" என்றனர்.

புதுச்சேரி அரசு சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் சுகாதார உதவியாளர்கள் சங்கத்தின்தலைவர் திருமலை மற்றும் பொதுச்செயலாளர் ஜெகநாதனிடம் கேட்டதற்கு, "சுகாதாரத் துறையில் சுகாதார ஆய்வாளர்களின் பணி என்பது இன்றியமையாத ஒன்றாகும். பொது சுகாதாரப் பணிகளான பொதுமக்கள் உபயோகிக்கும் குடிநீரின் தரத்தை உறுதி செய்யும் வகையில் வாரந்தோறும் ஆய்வுக்கு அனுப்பி வைப்பதை உறுதி செய்தல், பள்ளி குழந்தைகளுக்கு தடுப்பூசி அளிப்பது, இரும்பு சத்து மாத்திரைகள் மற்றும் ஆண்டுக்கு இருமுறை குடற்புழு நீக்க மாத்திரைகளை அளிப்பதை கண்காணித்தல்,

மழைக்காலத்தில் தேவையற்ற இடங்களில் தண்ணீர் தேங்கி, அதன் மூலம் உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய மலேரியா மற்றும் டெங்கு காய்ச்சலை பரப்பக்கூடிய கொசுக்களை கண்டறிந்து அழிக்கும் பணியில் சக களப்பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களை ஈடுபடுத்தி, கொசுக்களின் உற்பத்தியை கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட பொது சுகாதாரப் பணிகள் செம்மையாக நடைபெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதும், இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வதும், சுகாதார ஆய்வாளர்களின் பணியாகும்.

ஏற்கெனவே புதுச்சேரி மாநிலத்தில் மக்கள் தொகையின் எண்ணிக்கைக்கு ஏற்ப அனைத்து பிரிவுகளிலுமே போதுமான சுகாதார ஊழியர்கள் இல்லை. இந்த நிலையில் புதிய பணியிடங்களை உருவாக்காவிட்டாலும், தற்போது காலியாக உள்ள பதவிகளையாவது காலத்தோடு நிரப்புவதன் மூலம் ஓரளவிற்கு பொதுமக்களுக்கு தரமான சுகாதார சேவைகள் கிடைப்பது உறுதி செய்யப்படும்.

நோய் தடுப்பு பிரிவு ஊழியர்களான சுகாதார ஆய்வாளர்கள் வந்த நோய்க்கு சிகிச்சை அளிப்பதை விட, வரும் முன் பொதுமக்களை நோய்களிலிருந்து காக்கும் வகையில் செயல்படும் சுகாதார உதவியாளர்கள் உள்ளிட்ட களப்பணியாளர்களின் பணிகளை மேற்பார்வை செய்து வருகின்றனர்.

மேலும் ஒவ்வொரு மாதமும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் அந்தந்த மாதங்களில் நடைபெற்ற பணிகளை தொகுத்து, ரிப்போர்ட் தயார் செய்து உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கும் பணியையும் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் தற்போது மொத்தம் உள்ள 35 சுகாதார ஆய்வாளர்கள் பதவிகளில், 15 பதவிகள் காலியாக உள்ளன" என்றனர்.