கும்பகோணத்தில் குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்


கும்பகோணம்: கும்பகோணம் வட்டம், கீழக்கொட்டையூரைச் சேர்ந்தவர் சங்கர் மகன் ராபின் (24). கூலித் தொழிலாளியான இவருக்கு 17 வயதுடைய சிறுமியுடன், கும்பகோணத்தில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது.

இந்நிலையில், 17 வயது சிறுமிக்கு திருமணம் நடைபெறுவதாக, தஞ்சாவூர் குழந்தைகள் உதவி மையத்திற்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், சமூகநலத்துறை ஒருங்கிணைந்த சேவை மைய பணியாளர் நான்சி, குழந்தைகள் உதவி மைய மேற்பார்வையாளர் அஜிதா மற்றும் கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய போலீஸார் ஆகியோர் அந்த திருமண மண்டபத்திற்குச் சென்று, திருமணம் நடைபெறுவதற்கு முன்பு அந்த 17 வயது சிறுமியை மீட்டனர்.

பின்னர், காவல் நிலையத்திற்கு அவரை அழைத்து வரப்பட்டதைத் தொடர்ந்து தஞ்சாவூரில் உள்ள குழந்தைகள் நல குழுமத்தில் ஒப்படைக்கப்பட உள்ளனர். இது தொடர்பாக கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.