[X] Close

மேட்ரிமோனியல் மூலம் நூதன வழிப்பறி: பெண் பார்க்கும் படலத்தில் நகை, பணம், ஐபோன் இழந்த இளைஞர்


matrimonial-issue

  • kamadenu
  • Posted: 25 Oct, 2018 09:57 am
  • அ+ அ-

மேட்ரிமோனியல் மூலம் பெண் தேடிவந்த இளைஞரை ஏமாற்றி,  வரவழைத்து கத்திமுனையில் நகை, செல்போன், பணத்தை வழிப்பறி செய்த கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.

சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் காளிராஜன் (25). இவர் ஹாத்வே நிறுவனத்தில் பொறியாளராகப் பணியாற்றி வருகிறார். திருமணத்திற்கு நல்ல பெண் தேடி வந்தார். எதுவும் சரியாக அமையாததால் பிரபல தனியார் மேட்ரிமோனியல் இணையதளத்தில் தனது விவரங்களைப் பதிவு செய்து மணமகளைத் தேடிவந்தார்.

இந்நிலையில் அவருக்கு ஒரு போன் கால் வந்தது, பெங்களூரிலிருந்து ஓர் இளம்பெண் பேசினார். அவர் காளிராஜன் குறித்த விவரங்களைப் பார்த்ததாகவும் அவரை தனக்குப் பிடித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். உங்களைச் சந்திக்க வேண்டும் என்று அந்த இளம்பெண் கேட்க, சந்திக்கலாம் என்று காளிராஜன் கூறியுள்ளார்.

இதையடுத்து சென்னையில் என் சித்தி வீடு உள்ளது. அங்கு வந்த பின் உங்களைச் சந்திக்கிறேன். என்னைப் பெண் பார்க்க வரலாம் என்று கூறியுள்ளார். இந்நிலையில் நேற்று மீண்டும் காளிராஜனுக்குப் போன் செய்த அப்பெண் தான் சென்னைக்கு சித்தி வீட்டுக்கு வந்துள்ளதாகக் கூறியுள்ளார். அவரைச் சந்திக்கும் ஆவலில் இருந்த காளிராஜன் உங்களைப் பார்க்க எங்கு வரவேண்டும் என்று கேட்டுள்ளார்.

சென்னை வடபழனி காவல் நிலையம் அருகில் உள்ள பொன்னம்மாள் தெருவில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டின் முகவரியைக் கூறி அங்கு வந்து என்னைப் பார்க்கலாம் என்று கூறியுள்ளார். இதையடுத்து காளிராஜன் நன்றாக தன்னை அலங்கரித்துக்கொண்டு, செயின், மோதிரம் என போட்டுக்கொண்டு ஜம்மென்று போய் இறங்கியுள்ளார்.

அங்குள்ள குடிருப்பில் குறிப்பிட்ட அந்த அபார்ட்மென்ட் கதவைத் தட்டியுள்ளார். கதவைத் திறந்தவுடன் வீட்டுக்குள் ஒரு பெண் உள்பட 4 பேர் இருந்துள்ளனர்.

உள்ளே வாருங்கள் என காளிராஜனை அழைத்து அமரவைத்த அவர்கள் திடீரென கத்தியைக் காட்டி காளிராஜனை மிரட்டியுள்ளனர். என்னங்க இது பெண் பார்க்க வரச்சொல்லிவிட்டு இப்படி செய்கிறீர்கள் என காளிராஜன் கேட்க,  ஒழுங்காக செயின், மோதிரம், செல்போன் எல்லாவற்றையும் கொடு என மிரட்டிய அந்தக் கும்பல் அவரிடம் இருந்து செயின், மோதிரம், ஐ போன் முதலியவற்றை பறித்துக்கொண்டது.

பின்னர் டெபிட் கார்டைப் பறித்த அந்தக் கும்பல் அதன் பின் நம்பரைக்கேட்டு கத்திமுனையில் காளிராஜனை அமரவைத்து ஒரு நபரிடம் கார்டைக் கொடுத்து பணத்தை எடுத்துவரச் சொல்லியிருக்கிறது. பணம் எடுத்து வந்தவுடன் காளிராஜனை மிரட்டி பெண்ணிடம் பாலியல் தொந்தரவு கொடுக்க வந்தாயா எனக்கேட்டு நீ யாரையாவது அழைத்து வந்தால் இப்படித்தான் சொல்வோம் என மிரட்டி அனுப்பியுள்ளனர்.

பெண் பார்க்கும் ஆசையில் வந்து 4 சவரன் நகை, பணம், ஐபோன் ஆகியவற்றைப் பறிகொடுத்த விரக்தியில் வெளியே சென்ற காளிராஜன் வடபழனி காவல் நிலையத்தில் தான் ஏமாற்றப்பட்டது குறித்து புகார் அளித்துள்ளார்.

உடனடியாக சம்பவம் நடந்த வீட்டுக்குச் சென்றபோது அந்த வீடு பூட்டிக் கிடந்தது. உடனடியாக அங்கிருந்த செக்யூரிட்டியைப் பிடித்து விசாரித்தபோது அவர் இந்த வீட்டில் ஒருநாள் மட்டும் தங்க ரூ.2000 கொடுத்தார்கள். காலியாக இருந்ததால் தங்க வைத்தேன் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து போலீஸார் அங்குள்ள கண்காணிப்பு கேமரா மற்றும் அந்தப்பெண் பேசிய செல்போன் எண் ஆகியவற்றைச் சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேட்ரிமோனியலில் மாப்பிள்ளை தான் பார்ப்பார்கள் என்றால் வழிப்பறி செய்ய ஆளையும் பார்க்கும் புது சம்பவமாக அல்லவா இருக்கு என்று போலீஸார் எச்சரிக்கையாக இருக்கும்படி அறுவுறுத்தினர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close