திருச்சி அருகே ஊராட்சி மன்றத் தலைவியின் வீட்டில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு கோடி ரூபாய் பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி ஆகிய 40 தொகுதிகளுக்கும் எதிர்வரும் 19ம் தேதியன்று தேர்தல் நடக்கிறது. அதற்காக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் இறங்கி உள்ளனர். தேர்தல் பிரசாரம் முடிய இன்னும் 5 நாட்களே உள்ளன. இந்த நிலையில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் அன்பளிப்புகள் கொடுக்கப்படுவதை தடுக்க தேர்தல் ஆணையம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
பறக்கும் படை மற்றும் நிலையான தேர்தல் அதிகாரிகளால் இதுவரை 200 கோடி ரூபாய்க்கு மேல் தமிழ்நாட்டில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் நேற்றிரவு திருச்சி அருகே எட்டரை கிராமத்தில் உள்ள ஊராட்சி மன்றத் தலைவியின் வீட்டில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ஒரு கோடி ரூபாய் பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் குழுமணி அருகே எட்டரை பகுதியை சேர்ந்தவர் அன்பரசு. இவரது மனைவி திவ்யா எட்டரை பகுதியின் ஊராட்சிமன்றத் தலைவராக உள்ளார். இந்நிலையில் நேற்று இரவு அவரது காரில் கட்டு, கட்டாக பணம் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் தேர்தல் பறக்கும் படையினர் அவரது வீட்டிற்கு சென்று காரை சோதனையிட்டனர். அப்போது அந்த காரில் ஒரு கோடி ரூபாய் பணம் இருப்பது கண்டறியப்பட்டது. இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் வந்து, பணத்தை பறிமுதல் செய்தனர். இது குறித்து தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பிரதீப்குமார் வருமானவரித்துறை அலுவலகத்திற்கும் தகவல் தெரிவித்ததின் அடிப்படையில் அவர்களும் இந்தப்பகுதியில் சோதனையை தீவிரப் படுத்தியுள்ளனர்.
ரூ.1 கோடி பறிமுதல் செய்யப்பட்ட அன்பரசன், அதிமுக முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான பரஞ்சோதியின் உறவினர். நாமக்கல்லில் இருந்து தேர்தல் செலவுகளுக்காக மாவட்ட செயலாளர் பரஞ்சோதிக்கு பெருமளவு பணம் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதை நோட்டமிட்ட பறக்கும் படை அதிகாரிகள் அன்பரசுவின் காரைப் பின்தொடர்ந்துள்ளனர்.
அதிகாரிகள் சோதனையிட வருகிறார்கள் என்ற தகவல் தெரிந்ததும் பணம் அங்கிருந்து மற்ற இடங்களுக்கு பிரித்து எடுத்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து ஊராட்சித் தலைவி திவ்யா, அவரது கணவர் அன்பரசன், சிவப்பிரகாசம், பிரதாப் ஆகியோரிடம் போலீஸார் மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேர்தல் செலவுக்காக பணம் அனுப்பப்பட்டுள்ளதால், முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி உட்பட அதிமுகவின் முக்கிய தலைவர்களை வருமான வரித்துறையினர் தங்கள் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர். பிடிபட்ட பணத்துக்கும் கட்சியின் மேலிடத்தில் உள்ளவர்களுக்கும் உள்ள தொடர்பு குறித்தும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. திருச்சியில் ரூ.1 கோடி பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.