சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் நூற்பாலைகளின் மின்கட்டண முறைகளை கட்டணமின்றி மாற்றியமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் நூற்பாலைகளில் பீக் ஹவர் மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும், மின்சார நிலை கட்டண உயர்வுகளைத் திரும்பப்பெற வேண்டும், ஆண்டுதோறும் 6 சதவீதம் மின் கட்டண உயர்வு நடைமுறையை அடியோடு ரத்து செய்ய வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது.
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருப்பூர் மாவட்டம் இன்று செல்லும் நிலையில், மின்கட்டணம் தொடர்பான அறிவிப்பு நேற்று இரவு வெளியாகியுள்ளது.
அதன்படி குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே நடைபெறும் தொழில்களை மேற்கொள்ளும் தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும் சலுகையை ஆண்டுக்கு நான்கு முறை பயன்படுத்திக் கொள்ளலாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் தொழிற்சாலைகள், மின்சாரத்தை எவ்வளவு பயன்படுத்தினாலும், தாங்கள் பயன்படுத்தும் மின்சாதனங்களுக்கு ஏற்ப மாதந்தோறும் நிலையான கட்டணத்தை செலுத்தி வருகின்றன. அதாவது மீனவர்களுக்காக ஐஸ்கட்டி தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று, ஐஸ் தயாரித்தாலும், தயாரிக்காவிட்டாலும் மாதந்தோறும் ஒரு நிலைக் கட்டணத்தை செலுத்த வேண்டும்.
இத்தகைய நிறுவனங்கள் தங்களுக்கு சீசன் இல்லாத காலத்தில், மின்வாரியத்திற்கு கடிதம் அளித்து தங்களது நிலைக் கட்டணத்தை குறைத்துக் கொள்கின்றன. சீசன் மீண்டும் தொடங்கியதும், கடிதம் அளித்து நிலைக் கட்டணத்தை உயர்த்திக் கொள்கின்றன. இதற்காக குறிப்பிட்ட தொகை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் தொழில்துறையிலும் ஜவுளித்துறையிலும் தற்போது நிலவிவரும் இடர்பாடுகளை கருத்தில் கொண்டு நிலைக் கட்டணத்தில் அவர்களுக்கும் இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது. அதாவது சீசன் காலப் பணிகளை மேற்கொள்ளும் தொழிற்சாலைகள் ஆண்டுக்கு 4 முறை எவ்வித கட்டணமுமின்றி தங்களது நிலைக் கட்டணத்தை மாற்றியமைத்துக் கொள்ளலாம் என அறிவித்துள்ளார்.
மேலும், சூரிய ஒளி சக்தி மேற்கூரை மின் உற்பத்தி செய்ய மின் இணைப்புகளுக்கு 15 சதவீத மூலதன மானியம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர 12 கிலோ வாட்டுக்கு குறைவாக உள்ள சிறு, குறு தொழிற்சாலைகளுக்கான கட்டண விகிதத்தை மாற்றுவது குறித்து தமிழ்நாடு ஒழுங்குமுறை ஆணையத்தின் கருத்துரு பெற்றபின் பரிசீலிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.