திடீர் நிலச்சரிவு... சாலையில் உருண்ட பாறைகளால் பரபரப்பு!


சாலையில் உருண்டு கிடந்த பாறை

நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால், நிலச்சரிவு ஏற்பட்டு பாறைகள் சாலையில் உருண்டுள்ளன. இதனால் பொதுமக்களிடையே அச்சம் நிலவி வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் பேரிடர் காலங்கள் மற்றும் பருவமழை தொடங்கும் போது குன்னூர் பகுதிகளில் அதிகளவில் இடர்பாடுகள் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் பகல் நேரங்களில் தொடர் கன மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக பல இடங்களில் மண் சரிவு மற்றும் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை மற்றும் இணைப்புச் சாலைகளில் மண்ணின் ஈரப்பதம் அதிகரித்து உயரமான இடங்களில் உள்ள ராட்சத பாறைகள் உருண்டு சாலைகளில் விழுகின்றன.

இதன் காரணமாக பெரும் விபத்துக்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே நெடுஞ்சாலைத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம், குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை மற்றும் இணைப்புச் சாலைகளில் உள்ள அபாயகரமான ராட்சத பாறைகளைக் கண்டறிந்து அவற்றை உடைத்து அகற்றவும், சாலையோரங்களில் உள்ள அபாயகரமான மரங்களை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன் கழிவு நீர் கால்வாய்கள் மற்றும் கல்வெட்டுகளைத் தூய்மைப்படுத்துவதன் மூலம் நிலச்சரிவு மற்றும் பேரிடர் பாதிப்பிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்க முடியும் என்று தெரிவித்துள்ளனர்.

கடந்த காலங்களில் மழைக்காலத்திற்கு முன்பாகவே ஆபத்தான மரங்கள் மற்றும் மரக்கிளைகளை வெட்டி அகற்றியதை போன்று தற்போதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

x