தேர்தல் வியூக விற்பன்னரான பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைத்திருப்பது அரசியல் களத்தில் பரபரப்பை பற்ற வைத்திருக்கிறது.
மம்தா பானர்ஜி, ஜெகன்மோகன் ரெட்டி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்களை முதல்வராக அரியணையில் அமர வைத்த பெருமை தேர்தல் வியூக விற்பன்னரான பிரசாந்த் கிஷோருக்கு உண்டு.
2014-ல் பாஜகவின் பிரதமர் வேட்பாளரான மோடியின் வெற்றிக்காக அரசியல் சதுரங்கத்தில் களமாடிய பிரசாந்த் கிஷோர், 2024-ல் ராகுல் காந்திக்காக மெனக்கெடுவார் என்ற ஆரூடங்கள் முன்னதாக வளைய வந்தன. ஆனால் அவற்றை பொய்யாக்கும் வகையில் தற்போது காங்கிரஸ் கட்சிக்கும், ராகுல் காந்திக்கும் எதிராக சீறி இருக்கிறார் பிரசாந்த் கிஷோர்.
பிறரின் தேர்தல் வியூக களத்துக்கு ஆலோசனை அளிப்பதிலிருந்து விடுபட்டிருக்கும் பிரசாந்த் கிஷோர், தனது மாநிலமான பீகாரில் முழு நேர அரசியலில் குதித்திருக்கிறார்.
ஜன் சூராஜ் பாதயாத்திரை என்ற பெயரில் பீகார் மக்களை நேரடியாக சந்தித்து வரும் பிரசாந்த் கிஷோர், நேற்றைய நடைபயணத்தின் போது ராகுல் மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக முழங்கினார்.
அந்த வகையில் முசாபர்பூரில் பேசும்போது, “கடைசியாக ராகுல் காந்தியை பீகாரில் எப்போது பார்த்தீர்கள்? பீகாரின் 4 மாவட்டங்களின் பெயர்கள் அவருக்கு தெரிந்திருக்குமா? பீகார் பிரச்சினையில் அவர் பேசியதை நீங்கள் எப்போதாவது கேட்டிருக்கிறீர்களா?
40 ஆண்டுகளாக ஆட்சியிலிருந்த காங்கிரஸ் கட்சி பீகாரை அழித்துவிட்டது. எனவே தான், பீகாரில் இருந்து காங்கிரஸை மக்கள் முற்றிலுமாக விரட்டி அடித்துள்ளனர். இன்று பீகாரில் காங்கிரஸின் சுவடே இல்லை. அதனால்தான் இங்கே காங்கிரஸ் கட்சிக்கு ஐந்து சதவீத வாக்குகள்கூட இல்லை. பீகாரில் செய்த தவறுகளின் முழு விளைவுகளையும் காங்கிரஸ் தற்போது அனுபவித்து வருகிறது” என்று சாடினார்.