கேரளாவில் லாட்டரி டிக்கெட்டுக்காக போதையில் நண்பன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலத்தில் லாட்டரி டிக்கெட்டுகளுக்கு தடை இல்லை என்பதால் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. அதிலும் ஓணம் போன்ற விசேஷ நாட்களின் போது மக்கள் போட்டி போட்டிக் கொண்டு லாட்டரி டிக்கெட்டுகளை வாங்குவது வழக்கம். அந்த வகையில் அண்மையில் ஓணம் பண்டிகை சிறப்பு குலுக்கலில் ஒருவருக்கு 25 கோடி பரிசு விழுந்தது.
இதனிடையே, கொல்லம் மாவட்டம் தேவரக்கரை என்னும் பகுதியை சேர்ந்த தேவதாஸ் என்பவர், சில நாட்களுக்கு முன்பு, ஓணம் பம்பர் லாட்டரி டிக்கெட் ஒன்றை வாங்கி தனது நண்பர் அஜித்திடம் கொடுத்து, பத்திரமாக வைத்திருக்குமாறு கூறியுள்ளார்.
இந்நிலையில் கடந்த வாரம் லாட்டரி டிக்கெட்டுக்கான குலுக்கல் நடைபெற்றது. அப்போது மதுபோதையில் இருந்த நண்பர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பிரச்சினை முற்றியதை அடுத்து, அஜித் என்பவர் பொறுமை இழந்தார்.
அவர், தான் வைத்திருந்த வெட்டுக் கத்தியால், தேவதாசின் கையை வெட்டினார். அதில் படுகாயமடைந்த தேவதாஸ், ரத்தம் அதிகம் வெளியேறி சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார் அஜித்தை கைது செய்தனர். கொலை செய்யப்பட்ட தேவதாசின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.