[X] Close

தமிழக மக்களுக்கு ஏமாற்றம அளிக்கும் பட்ஜெட் - அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து


leaders-about-tn-budget

  • kamadenu
  • Posted: 16 Mar, 2018 09:40 am
  • அ+ அ-

சென்னை தமிழக மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கக்கூடிய வகையில் பட்ஜெட் உள்ளதாக அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர்:

தமிழகத்தில் நிலவும் பல்வேறு முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணாத, மக்களுக்கு ஏமாற்றம் தரும் பட்ஜெட்டாகவே இந்த பட்ஜெட் அமைந்துள்ளது. தமிழக அரசின் கடன் சுமை ஆண்டுதோறும் அதிகரித்துக்கொண்டே போய், இப்போது 3.55 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. மொத்தத்தில் மக்களின் எதிர்பார்ப்புகளை, தேவைகளை நிறைவேற்றிட தொலைநோக்கு சிந்தனையற்ற பட்ஜெட்டாக அமைந்துள்ளது.

பாமக நிறுவனர் ராமதாஸ்:

மதுக்கடைகளை மூடுவது குறித்த அறிவிப்பு பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. மாறாக, மதுமூலமான வருவாய் அதிகரிக்கும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பதால் கூடுதலாக மதுக்கடைகளை திறக்க அரசு திட்டமிட்டிருப்பது உறுதியாகிறது. தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல அதிமுக அரசால் முடியாது என்பதை இந்த பட்ஜெட் மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறது. வளர்ச்சிக்கு வழி வகுக்காத இந்த பட்ஜெட்டால் தமிழக மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்:

கடந்த நிதி ஆண்டில் அறிவித்த பல திட்டங்கள் இன்னும் நிறைவேற்றப்படாத சூழ்நிலையில், தற்போது பல திட்டங்களுக்கு பல ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கி தமிழக அரசு அறிவித்திருப்பது கண்துடைப்பு நாடகமாகும். இந்த பட்ஜெட்டால் தமிழ்நாட்டின் கடன்சுமை மேலும் அதிகமாகுமே தவிர, தமிழகம் வளர்ச்சியடையாது.

அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்:

தொலைநோக்குப் பார்வை, புதிய திட்டங்கள் என எதுவும் இல்லாமல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தின் கடன் உயர்ந்துள்ளது மிக மோசமான நிதி நிர்வாகத்தை பழனிசாமி அரசு மேற்கொண்டிருப்பதைத்தான் காட்டுகிறது.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ:

அதிமுக அரசின் பட்ஜெட், தமிழக மக்களுக்கு ஏமாற்றத்தைத்தான் பரிசாக தந்திருக்கிறது. உள்ளாட்சித் தேர்தல் பற்றிய திட்டவட்டமான அறிவிப்பு இல்லாதது கண்டனத்துக்கு உரியது. உதய் மின் திட்டத்தில் இணைந்தால் ரூ.1,335 கோடி சேமிப்பு ஏற்படும் என்று கடந்த பட்ஜெட்டில் தெரிவித்துவிட்டு, இப்போது உதய் திட்டத்தால் மின் வாரியம் நஷ்டத்தைச் சந்தித்து வருவதாகத் தெரிவிப்பது முரணாக உள்ளது. வேளாண் துறையில் நீடித்த வளர்ச்சி என்பது அதிமுக அரசின் வெற்று அறிவிப்பு.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்:

மாநில நிதியமைச்சர் சமர்ப்பித்திருக்கும் பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாகவே உள்ளது. பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி வரி கொள்கைகளால் தொழில் பாதிப்பு மற்றும் வேலையிழப்புகளை சந்தித்து வரும் பின்னணியில் தமிழக அரசின் பட்ஜெட், மக்களுக்கு எவ்வித நிவாரணமும் வழங்காதது வேதனை தருகிறது. ச

ிறு, குறு தொழில்களை மேம்படுத்துவது, புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவது குறித்த உருப்படியான திட்டங்கள் இல்லை.

இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன்:

கடன் பெற்று ஆட்சி நடத்துவோம் என்றும், மத்திய அரசு தங்களுக்கு உதவும் என்றும் பகல் கனவு காணும் தமிழக அரசு, மக்களுக்கு ஏமாற்றமளிக்கும் பட்ஜெட்டை சமர்ப்பித்துள்ளது. கரும்பு விவசாயிகளுக்கு ஆலைகள் வழங்கிட வேண்டிய நிலுவைத் தொகை குறித்தும், பால் உற்பத்தியாளர்களுக்கு விலையை உயர்த்தி தருவது குறித்தும் எவ்வித அறிவிப்பும் இல்லாதது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்:

பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. ஏற்கெனவே செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கும் கூடுதல் நிதி ஒதுக்கீடு அவ்வளவாக செய்யப்படாதது மட்டுமின்றி, பல திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் கடன் சுமார் மூன்றரை லட்சம் கோடி இருப்பதாகவும், இந்த ஆண்டு மேலும் ஒரு லட்சம் கோடிக்கு அதிகமாக புதிய கடன் வாங்கப்போவதாகவும் தமிழக அரசு கூறியுள்ளது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்:

உளுந்து, துவரை, பச்சைப் பயறு போன்றவற்றை கொள்முதல் செய்ய அறிவித்த அரசு, இன்னும் பல விவசாயப் பொருட்களை கொள்முதல் செய்ய முன்வரவில்லை என்பது ஏமாற்றத்துக்கு உரியது.1 டன் கரும்புக்கு ரூ.2,750 விவசாயிக்கு வழங்கப்படும் என்பது போதுமானதல்ல. அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றாத பட்ஜெட்டாக நடப்பாண்டு பட்ஜெட் உள்ளது.

கொமதேக பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன்: அவினாசி – அத்திக்கடவு திட்டத்துக்கு பட்ஜெட்டில் நிதி அறிவிப்பதோடு நிற்காமல், திட்டத்தை விரைந்து செயல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும்.

பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், அகில இந்திய மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ந.சேதுராமன்,பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன் ஆகியோர் பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாகவும், இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர் பட்ஜெட் குறித்து வரவேற்பும் தெரிவித்துள்ளனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close