திடீர் நெஞ்சுவலி... 40 பயணிகளை காப்பாற்றி உயிரிழந்த அரசு பேருந்து ஓட்டுநர்!


நெஞ்சுவலி

திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலியால் துடித்த ஓட்டுநர், அரசு பேருந்தை ஓரம்கட்டி 40க்கும் மேற்பட்ட பயணிகளின் உயிரைக் காப்பாற்றி உயிரிழந்த சோக சம்பவம் ராஜபாளையத்தில் நடந்துள்ளது.

நெல்லையில் இருந்து விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. பேருந்தில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பேருந்தை தென்காசி மாவட்டம் கடையத்தை அடுத்த பெத்தநாடார்பட்டி கிராமம் வடக்கு தெருவை சேர்ந்த கார்மேகம் (47) என்பவர் ஓட்டி வந்தார்.

நடத்துனராக வண்ணமுத்துக் குமரன், பயணிகளுக்கு பயணச்சீட்டு கொடுத்துக் கொண்டு இருந்தார். பேருந்து ராஜபாளையம் அருகே முதுகுடி அருகே விரைந்து கொண்டிருந்தது.

அப்போது, ஓட்டுநருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே பேருந்தை ஓரங்கட்டிய ஓட்டுநர் கார்மேகம், தொடர்ந்து பேருந்தை இயக்க முடியாமல் தவித்தார். இதைப் பார்த்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து கண்டக்டர் அவருக்கு தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தினார். சற்று தெளிவான நிலையில் இருந்த டிரைவர் கார்மேகன் தொடர்ந்து பேருந்தை இயக்கியபடி ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் வந்து சேர்ந்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் டிக்கெட் எடுத்திருந்த பயணிகள் மட்டும் வேறு பேருந்தில் ஏற்றிவிடப்பட்டனர்.

பின்னர் ஓட்டுநர் கார்மேகத்தை ஆட்டோவில் நடத்துனர் வண்ணமுத்துக்குமரன் ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு ஓட்டுநர் கார்மேகம் உயிரிழந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையிலும் தைரியமாக பேருந்தை ஓட்டிச் சென்று பயணிகளை பத்திரமாக இறக்கிவிட்ட ஓட்டுநர், சிகிச்சையின்போது உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. ஓட்டுநர் கார்மேகத்துக்கு கார்த்திக் என்ற மகனும், மோனிகா என்ற மகளும் உள்ளனர்.

x