[X] Close

தருமபுரியில் தொடரும் சிறு வயது திருமணங்கள்: அரசு நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை


child-marriage-issue-at-dharmapuri

  • kamadenu
  • Posted: 20 Oct, 2018 10:40 am
  • அ+ அ-

தருமபுரி மாவட்டத்தில் சிறு வயது திருமணங்கள் தொடர்வதால் சமூக ஆர்வலர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

தருமபுரி மாவட்டம் புலிகரை அருகே பத்தாலஅள்ளி கிராமம் உள்ளது. இங்கே மயிலாபாறை முருகன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் சுற்று வட்டார கிராம மக்கள் அவ்வப்போது திருமணங்கள் நடத்துவது வழக்கம். இந்நிலையில், நேற்று அதிகாலை இந்தக் கோயிலில் 4 திருமணங்கள் நடக்க இருப்பதாகவும், 4 திருமணங்களும் சிறு வயது திருமணங்கள் என்றும் நேற்று முன் தினம் இரவு தருமபுரி சைல்டு லைன் அமைப்பின் 1098 என்ற எண்ணுக்கு போன் தகவல் கிடைத்துள்ளது.

தகவலைத் தொடர்ந்து, சைல்டு லைன் அமைப்பினர் குறிப்பிட்ட பகுதியில் ஆய்வுக்குச் செல்ல தேவையான ஏற்பாடுகளில் இறங்கினர். வருவாய், காவல் துறையினர் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினருடன் தான் இதுபோன்ற ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்பதால் குழு ஒன்றை ஒருங்கிணைத்துள்ளனர். இந்தக் குழுவினர் அதிகாலை 3 மணியளவில் அந்தக் கோயிலுக்கு சென்றுள்ளனர். அதற்கு முன்பாகவே, கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை பகுதியைச் சேர்ந்த ஒரு சிறு வயது ஜோடிக்கு திருமணம் முடிந்து அவர்கள் புறப்பட்டுச் சென்றது தெரிய வந்தது. இதைத் தவிர அந்த திருமணக் குழுவினர் தொடர்பான எந்தத் தகவலையும் திருமண தடுப்புக் குழுவினரால் திரட்ட முடியவில்லை. மேலும் ஒரு திருமணமும் முன்னதாகவே நடந்து முடிந்துள்ளது. பாலக்கோடு பகுதியைச் சேர்ந்த அந்த குடும்பத்தை கண்டறிந்து சென்று ஆய்வு மேற்கொண்டபோது மணப்பெண்ணுக்கு 16 வயதே ஆகி இருந்ததால் அந்த சிறுமியை மீட்டு சிறார் நலக் குழுமத்தில் ஒப்படைத்தனர்.

மற்றொரு திருமண குழுவினரின் சான்றிதழ்களை ஆய்வு செய்தபோது மணப்பெண்ணுக்கு வெகு சமீபத்தில் 18 வயது நிரம்பியிருந்ததால் திருமண நிகழ்வுக்கு ஆய்வுக் குழுவினர் தடை கூறவில்லை.

காலை 10 மணி வரை அந்தக் கோயிலில் சிறு வயது திருமண தடுப்புக் குழுவினர் காத்திருந்தபோதும் மற்றொரு திருமண வீட்டார் கோயிலுக்கு வந்து சேரவே இல்லை. அந்த திருமண வீட்டார் யார், மணப்பெண்ணின் வயது என்ன என்பது உள்ளிட்ட எந்த விவரங்களும் ஆய்வுக் குழுவுக்கு கிடைக்கவில்லை. இவ்வாறு தருமபுரி மாவட்டத்தில் அவ்வப்போது சிறு வயது திருமணங்கள் தொடர்ந்து வருவது சமூக ஆர்வலர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் சிலர் கூறியது:

பாலக்கோடு அருகே திருமணம் முடிந்த பின்னர் நேற்று மீட்கப்பட்ட சிறுமிக்கு 16 வயது. 26 வயது நிரம்பிய மணமகன் பெங்களூருவில் கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகிறார். அதிகாரிகள் குழுவினர் ஆய்வுக்கு செல்வதை அந்த திருமண வீட்டார் முன்னதாகவே அறிந்துள்ளனர். எனவே, மணப்பெண்ணின் தாலியையும், மெட்டியையும் அகற்றி விட்டு திருமணமே நடக்காதது போல் மறைக்க முயன்றுள்ளனர். ஆனால், திருமண அழைப்பிதழையும், திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் ஆதாரமாகக் கொண்டு அதிகாரிகள் சிறுமியை மீட்டுள்ளனர்.

ஆய்வுக் குழுவை ஒருங்கிணைக்கும் பணி நடக்கும்போதே ஆய்வு குறித்த தகவல்கள் எப்படியோ கசிய விடப்படுகிறது. இதனாலேயே மண வீட்டார் குறித்த நேரத்துக்கு முன்னதாக திருமணத்தை நடத்தி முடித்துள்ளனர். சிலர் குறிப்பிட்ட கோயிலுக்கு வராமலே இருந்துள்ளனர். அந்த ஜோடியை வேறு இடத்துக்கு அழைத்துச் சென்று கண்டிப்பாக திருமணம் நடத்தி முடித்திருப்பர். இந்த விவகாரத்தில் அரசு நிர்வாகத்தின் கண்காணிப்பும், நடவடிக்கையும் ஆக்கபூர்வமாக இல்லாததே சிறு வயது திருமணங்கள் தொடரக் காரணம். இந்நிலை மாற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு கூறினர்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close