தேர்தல் பிரச்சாரத்தில் அரசு ஊழியர் பங்கேற்கலாமா... அமைச்சர் பொன்முடி உதவியாளர் மீது உயர் நீதிமன்றத்தில் வழக்கு!


அமைச்சர் பொன்முடி

அமைச்சர் பொன்முடியுடன் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்த அரசு ஊழியருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கடந்த 2023-ம் ஆண்டு ஈரோடு கிழக்கு தொகுதி எம் எல் ஏ-வாக இருந்த காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவேரா உடல் நலக்குறைவால் திடீரென உயிரிழந்தார். இதையடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அப்போது திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மறைந்த திருமகன் ஈவேராவின் தந்தையுமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெற்றி பெற்றார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் (கோப்பு படம்)

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நடத்தை விதிகளில், அரசு ஊழியர்கள் அரசியல் கட்சிகளில் உறுப்பினராக இருக்கக்கூடாது எனவும், தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடக் கூடாது எனவும் கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்த விதிகளை மீறி, அமைச்சர் பொன்முடியின் உதவியாளராக பணியாற்றி வந்த அரசு ஊழியரான சோமஸ்கந்தன் ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, லோக் ஜனசக்தி கட்சியின் மாநில பொதுச்செயலாளர் செல்வபாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

சென்னை உயர்நீதிமன்றம்

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, “பணி சம்பந்தமான இந்த விவகாரத்தை எப்படி பொது நல வழக்காக கருத முடியும்?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆஜராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து, வழக்கின் விசாரணையை ஜூன் 27-ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

இதையும் வாசிக்கலாமே...

x