இயற்கை விவசாயி பாப்பம்மாள் மறைவுக்கு குடியரசு தலைவர், பிரதமர், முதல்வர் இரங்கல்


சென்னை: இயற்கை விவசாயத்துக்காக பத்மஸ்ரீ விருது பெற்ற 108 வயது மூதாட்டி பாப்பம்மாள் நேற்று முன்தினம் காலமானார். அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர், முதல்வர் உட்பட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:

குடியரசு தலைவர் திரவுபதி முர்மு: பாப்பம்மாளின் மறைவு செய்தியறிந்து வருத்தமடைந்தேன். 100 ஆண்டுகளுக்கு மேலான தனது நீண்ட வாழ்வில், பெரும்பகுதியை இயற்கை விவசாயத்துக்காக அர்ப்பணித்தவர். அதற்காக பத்மஸ்ரீ விருது வழங்கியும் கவுரவிக்கப்பட்டவர். அனைவரும் அவர் ஒரு முன்மாதிரி. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்.

பிரதமர் நரேந்திர மோடி: பாப்பம்மாளின் மறைவு ஆழ்ந்த வேதனை அளிக்கிறது. இயற்கை விவசாயத்தில் தனி முத்திரை பதித்தவர். அவரது பணிவு மற்றும் கனிவான இயல்புக்காகவே மக்கள் அவரைப் பாராட்டினர். எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினருடன் இருக்கும்.

ஆளுநர் ஆர்.என்.ரவி: விவசாயத்துறையில் ஒரு உண்மையான ஆன்றோராகவும், இயற்கை விவசாயத்தின் சாம்பியனாகவும் விளங்கிய பத்மஸ்ரீ பாப்பம்மாளின் மறைவால் வருத்தமுற்றேன். அவரது பங்களிப்புகள் நீடித்த விவசாயத்தின் ஆணிவேரளவில் அழியாத அடையாளத்துடன் விட்டுச் சென்றுள்ளன.

முதல்வர் மு.க.ஸ்டாலின்: கட்சி முன்னோடியும், பெரியார் விருது பெற்றவருமான பாப்பம்மாள் தனது 108-வது வயதில் மறைவெய்தினார் என்ற துயரச் செய்தியறிந்து கலங்கினேன். கட்சி தொடங்கப்பட்ட நாள் முதல் தன்னை இயக்கத்துக்காக அர்ப்பணித்து பணியாற்றியவர். இறுதி மூச்சு வரை, சுறுசுறுப்பாக வயலில் இறங்கி வேளாண் பணிகள் செய்தவர். அவரை சந்தித்து உரையாடிய ஒவ்வொரு தருணமும் என்நெஞ்சில் எப்போதும் நீங்காமல் பசுமையாக இருக்கும். என் குடும்பத்தில் ஒருவரை பிரிந்த வலியுடன்தவிக்கிறேன். பாப்பம்மாளை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்: இயற்கை விவசாயத்துக்கு எடுத்துக்காட்டாய் திகழ்ந்த பத்மஸ்ரீ பாப்பம்மாள் இயற்கை எய்திய செய்தியறிந்து மனவேதனை அடைந்தேன்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: இயற்கை விவசாயத்துக்கு முன்னுதாரணமாக விளங்கிய பத்மஸ்ரீ பாப்பம்மாள் இழப்பு விவசாய மக்களுக்கு பேரிழப்பாகும்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: வேளாண் துறையில் முன்னோடியாக விளங்கிய பாப்பம்மாளின் வாழ்க்கை இளைய தலைமுறையினருக்கு பெரும் எடுத்துக்காட்டு.

தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை: இயற்கை விவசாயத்தின் மீது பற்று கொண்டு பணியாற்றிய பாப்பம்மாள் விவசாய மக்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்தவர்.

பாமக தலைவர் அன்புமணி: பாப்பம்மாளின் சேவைகளை மதித்து பத்மஸ்ரீ விருது வழங்கும் விழாவில் பிரதமர் மோடியே, அவரது காலில் விழுந்து வணங்கியது சிறந்த அங்கீகாரமாகும்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: பத்மஸ்ரீ பாப்பம்மாளின் இழப்பு விவசாயத்துறைக்கும், விவசாயிகளுக்கும் ஈடு செய்யமுடியாத இழப்பு.

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா: இறுதிமூச்சு வரை, சுறுசுறுப்பாக வயலில் இறங்கி வேளாண் பணிகள் செய்துவந்தவர் விவசாயி பாப்பம்மாள். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்.

x