சென்னை - நாகர்கோவில் இடையே வியாழக்கிழமைகளில் இயக்கப்படும் வந்தே பாரத் சிறப்பு ரயில் சேவையை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டித்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கோடை விடுமுறை தொடங்கியுள்ள நிலையில், சென்னை-நாகர்கோவில் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவை இம்மாதம் 25-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. சென்னை-நாகர்கோவிலுக்கு இடையே வந்தே பாரத் சிறப்பு ரயில் சேவை கடந்த ஜனவரி மாதம் தொடங்கி வைக்கப்பட்டது.
ஆனால், ஜனவரி 25-ம் தேதியுடன் தனது பயணத்தை நிறுத்திக்கொண்டது. ஏற்கெனவே, சென்னை-நெல்லை வந்தே பாரத் ரயில் இயக்கப்படுவதால், நாகர்கோவிலுக்கான சேவை நிறுத்தப்பட்டது. இந்த ரயில் சேவையை தொடர வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், இந்த ரயில் இன்று முதல் வரும் ஏப்ரல் 25-ம் தேதி வரை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்திருக்கிறது. பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்க இந்த ரயில் சேவை இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எழும்பூரில் ஏப்.4 முதல் ஏப்.25 வரை வியாழக்கிழமைகளில் காலை 5.15 மணிக்குப் புறப்பட்டு மதியம் 02.10 மணிக்கு நாகர்கோவில் சென்று சேரும். மறு மார்க்கத்தில் நாகர்கோவிலில் இருந்து மதியம் 02.50 மணிக்கு புறப்பட்டு இரவு 11.45 மணிக்கு எழும்பூர் சென்று சேரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில் சேவை மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளதால் தென் மாவட்டத்திற்கு செல்லும் பயணிகளுக்கு பெரிதும் உதவியாக இருக்கும். ரயில்வேயின் இந்த அறிவிப்பால் தென் மாவட்ட பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.