தாம்பரம்: தாம்பரம் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்த போக்குவரத்து ஆய்வாளரை மிரட்டிய நபர்களை கைது செய்து பிணையில் விடுவித்த சட்டம் - ஒழுங்கு போலீஸாரின் நடவடிக்கைக்கு போக்குவரத்து போலீஸார் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம் பகுதிகளில் ஜிஎஸ்டி சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை போக்குவரத்து போலீஸார் தொடர்ச்சியாக அகற்றி வருகின்றனர். மாநகராட்சி ஊழியர்களுடன் இணைந்து கடப்பேரி பகுதியில் ஜிஎஸ்டி சாலையோரம் இருந்த வாகன ஆக்கிரமிப்பு, விளம்பர பலகைகளை போலீஸார் அகற்றி வந்தனர்.
அப்போது அங்குள்ள அரசு மதுபான கடைக்கு வெளியே போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தின் நம்பர் பிளேட்டில் விதிகளை மீறி கார்த்திக் என பெயர் எழுதியிருந்ததாலும், சைலன்சர் அதிக ஒலி எழுப்பும் விதத்தில் இருந்ததாலும், தாம்பரம் போக்குவரத்து ஆய்வாளர் செல்லப்பாண்டியன் தலைமையிலான போக்குவரத்து போலீஸார் அந்த வாகனத்தின் மீது வழக்குப்பதிவு செய்ய முயன்றனர்.
அப்போது அரசு மதுபானக் கடையில் இருந்து வெளியே வந்த மூன்று பேர் கொண்ட கும்பல், போக்குவரத்து ஆய்வாளர் செல்லப்பாண்டியனிடம் என்னுடைய வண்டியின் மீது எப்படி நீ வழக்குப்பதிவு செய்வாய் என தகாத வார்த்தைகளால் பேசி தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, சம்பவம் குறித்து போக்குவரத்து ஆய்வாளர் செல்லப்பாண்டியன் தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து அங்கு வந்த போலீஸார், போக்குவரத்து ஆய்வாளரிடம் தகராறில் ஈடுபட்ட மூன்று நபர்களை கைது செய்ய முயற்சித்தனர். அப்போது அதில் ஒருவர் அங்கிருந்து தப்பிச் சென்றார்.
இதனைத் தொடர்ந்து இருவரை கைது செய்த போலீஸார், அவர்களை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கிழக்கு தாம்பரம், காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் (25), தட்சிணாமூர்த்தி (26) என்பதும், தப்பிச் சென்ற நபர் அருண் கார்த்திக் என்பதும் தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து அரசு அதிகாரியை பணி செய்யவிடாமல் தடுத்தது, பொது இடத்தில் தகாத வார்த்தைகளால் திட்டியது, கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். ஆனால், உயர் அதிகாரிகளின் அழுத்தம் காரணமாக, கைது செய்த இருவரையும் ஸ்டேஷன் பெயிலில் விடுவித்தனர்.
இந்த நிகழ்வானது போக்குவரத்து போலீஸார் மத்தியில் கடும் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து நம்மிட பேசிய அவர்களில் சிலர், “தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் போக்குவரத்து போலீஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம். போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் வாகனங்கள் மீது வழக்குகளையும் பதிவு செய்து வருகிறோம்.
அவ்வாறு செய்யும் போது தொடர்ந்து மிரட்டல்கள், எதிர்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் நேற்று தாம்பரத்தில் நடந்த சம்பவத்தை குறித்து புகார் செய்தும் சட்டம் - ஒழுங்கு போலீஸார் போதிய நடவடிக்கை எடுக்காமல் போக்குவரத்து போலீஸாரை மிரட்டியவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டது வருத்தமாக உள்ளது. ஆணையர் இந்த விவகாரத்தில் தலையிட்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.