முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் 33 ஆண்டுகால அரசியல் பயணம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.
இந்தியாவின் தலைமைப் பொருளாதார ஆலோசகர், இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர், நிதிச் செயலர், பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) தலைவர் என்ற பதவிகளை வகித்த மன்மோகன் சிங் பின்னர் நிதியமைச்சர் மற்றும் இரண்டு முறை பிரதமராகப் பணியாற்றியுள்ளார்.
மன்மோகன் சிங் 1991-ல் நிதியமைச்சராக இருந்து தாராளமயமாக்கலைக் கொண்டு வந்த பெருமை மற்றும் 2008 நிதி நெருக்கடியில் இருந்து நாட்டைப் பாதுகாத்த பெருமைக்குரியவர்.
1991-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நரசிம்ம ராவ் ஆட்சியின் போது அசாம் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றார். கடந்த 33 ஆண்டுகளாக மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்த மன்மோகன் சிங், இன்றுடன் ஓய்வு பெறுவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
கடந்த 1991 முதல் 2019-ம் ஆண்டு வரை அசாம் மாநிலத்தில் இருந்தும், 2019-ம் ஆண்டில் இருந்து தற்போது வரை ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்தும் மன்மோகன் சிங் மாநிலங்களவைக்கு சென்றார். இந்த நிலையில் அவரது பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது.
மன்மோகன் சிங் ஓய்வைத் தொடர்ந்து மாநிலங்களவையில் காலியாகும் ராஜஸ்தான் மாநிலத்துக்கான உறுப்பினராக காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தி பதவியேற்கிறார். அந்த வகையில், சோனியா காந்தி முதல் முறையாக மாநிலங்களவை உறுப்பினராக நாடாளுமன்றம் செல்லவிருக்கிறார்.
மன்மோகன் சிங் தவிர 9 மத்திய அமைச்சர்கள் மற்றும் 54 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்றுடன் ஓய்வு பெறவுள்ளனர். டாக்டர் மன்மோகன் சிங், ஒரு தலைவராகவும், எதிர்க்கட்சியாகவும் அவரது விலைமதிப்பற்ற சிந்தனைகளால், சபையில் அவர் ஆற்றிய பங்களிப்பை நினைவுகூர விரும்புகிறேன். இவ்வளவு காலமாக, அவர் இந்த சபையையும் நாட்டையும் வழிநடத்திய விதம், அதற்காக மன்மோகன் சிங் என்றென்றும் நினைவுகூறப்படுவார்” என்று பிரதமர் மோடி ஓய்வு பெறும் எம்.பி க்களுக்கான பாராட்டு விழாவில் மன்மோகன் சிங்கை பாராட்டி பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.