பலமுறை இலங்கைக்கு சென்றபோது பிரதமர் மோடிக்கு கச்சத்தீவு பற்றி நினைவு வரவில்லையா என்று கேள்வி எழுப்பிய முதல் அமைச்சர் ஸ்டாலின், தேர்தல் வந்ததும் கச்சத்தீவு நாடகம் போடுவதாக விமர்சித்துள்ளார்.
வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கதிர் ஆனந்தை ஆதரித்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். வேலூரில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், "பொய்களையும், அவதூறுகளையும் துணையாக அழைத்துக்கொண்டு தேர்தல் சீசனுக்கு மட்டும் தமிழ்நாட்டுக்கு வருகிறார் பிரதமர் மோடி. தேர்தல் முடிந்ததும் அவர் தமிழ்நாட்டின் பக்கமே வர மாட்டார். விளம்பரத்துக்காக அந்தந்த ஊர்களுக்கு தகுந்த உடையை அணிந்து செல்வதை மட்டுமே பிரதமர் மோடி சரியாக செய்து வருகிறார். ஆனால், அந்த ஊரையும், ஊர் மக்களையும் அவர்களின் பண்பாட்டையும் மதிப்பதில்லை.
இத்தனை முறை இலங்கைக்கு சென்ற பிரதமர் மோடிக்கு கச்சத்தீவு பற்றி நினைவு வரவில்லையா? உச்ச நீதிமன்றத்தில் இது குறித்த வழக்கில் கூட, கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது. மீட்க வேண்டுமானால் போர்தான் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு கூறியது. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியபோது, வெளியுறவு கொள்கை என்று மழுப்பலாக மத்திய அரசு பதில் அளித்தது. இப்போது தேர்தல் வந்ததும் கச்சத்தீவு நாடகம் போடுகின்றனர்" என்றார்.
தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி குறித்து பேசிய ஸ்டாலின், "எதிர்க்கட்சியாக இருக்கும் தாங்கள் எப்படி பாஜகவை எதிர்க்க முடியும் என எடப்பாடி பழனிசாமி நேற்று பேசியிருக்கிறார். ஆனால், ஆளும் கட்சியாக இருக்கும் போது, பாஜகவின் அனைத்து சட்டங்களுக்கும், அந்த புலிப்பாண்டி, எலிப்பாண்டியாக மாறி ஆதரவு அளித்தார். ஆனால், திமுக எதிர்க்கட்சியாக இருக்கும் போது மக்கள் விரோத சட்டத்திற்கு எதிராக போராடினோம். இப்போது ஆளுங்கட்சியாக ஆளுநரின் அத்துமீறல்களை எதிர்த்து உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடி வெற்றி கண்டுள்ளோம்.
சிஏஏ சட்டத்தை எதிர்த்து சட்டப்பேரவையில் நம் அரசு தீர்மானம் கொண்டு வந்தபோது, அதை ஆதரிக்கக் கூட மனம் இல்லாமல் எம்.எல்.ஏ.க்களுடன் வெளியே சென்று விட்டார் எடப்பாடி பழனிசாமி. நாடாளுமன்றத்தில் சி.ஏ.ஏ. சட்டத்தை ஆதரித்து வாக்களித்து அது நிறைவேற முக்கிய காரணியாக இருந்துவிட்டு, இப்போது அதை எதிர்க்கிறோம் என்று அதிமுகவும், பாமகவும் கூறுவது பசப்பு நாடகம் இல்லையா? இந்த சட்டத்தை எதிர்த்து போராடிய என் மீதும், திருமாவளவன், ப.சிதம்பரம் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்தார் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி" என்று கடுமையாக சாடினார்.