பாஜக மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்தால் இந்தியா தீப்பற்றி எரியும் என்று ராகுல் காந்தி பேசியதற்கு, பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
உத்தராகண்ட் மாநிலத்தில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டு வரும் பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவும் அதன் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராகவும் கடும் பதிலடி தந்து வருகிறார். ராகுல் காந்தியின் பேச்சை முன்வைத்து, ’இப்படித்தான் பேசுவதா இதுதான் ஜனநாயகத்தின் மொழியா...’ என மோடி சீற்றத்துடன் கேட்டிருக்கிறார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஞாயிறு அன்று எதிர்க்கட்சிகளின் சார்பில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் மாபெரும் கண்டன போராட்டம் நடைபெற்றது. அதில் இண்டியா கூட்டணியின் 27 கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிகள் பங்கேற்றனர். பாஜக அரசுக்கு எதிராகவும், அதன் மூன்றாவது ஆட்சிக்கான முனைப்பில் எதிர்க்கட்சிகள் மீது பாய்வது குறித்தும் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
அந்த வகையில் காங்கிரஸ் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி, ராம்லீலா கூட்டத்தில் பேசும்போது, ”பிரதமர் மோடி தேர்தலின் போட்டியை நிர்ணயித்து விட்டார். தேர்தலுக்கு முன்பே இரண்டு முதல்வர்களை சிறைக்கு அனுப்பி விட்டார். இந்த நிர்ணயிக்கப்பட்ட தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியில் அமரப்பார்க்கிறது. அப்படி ஆட்சியில் அமர்ந்தால் அரசியல் சட்டத்தை மாற்ற முயலும். அப்படி முயன்றால் நாடு தீப்பற்றி எரியும். இதை நினைவில் கொள்ளுங்கள்” என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதனை சுட்டிக்காட்டி இன்றைய உத்தராகண்ட் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பதிலடி தந்தார். ”நாடு மூன்றாவது முறையாக பாஜகவைத் தேர்ந்தெடுத்தால், இந்தியா எரிந்து விடும் என்று காங்கிரஸ் குடும்பத்தின் இளவரசர் தெளிவான அழைப்பு விடுத்துள்ளார். அவர்கள்தான் 10 ஆண்டுகள் முன்புவரை இந்தியாவை ஆண்டார்கள். இப்போது நாடு எரியும் என்று பேசுகிறார்கள். இதை மக்களாகிய நீங்கள் ஆமோதிப்பீர்களா? நாட்டை தீக்கிரையாக்க அனுமதிப்பீர்களா? இந்த மொழி ஏற்கத்தக்கதா? இதுதான் ஜனநாயகத்தின் மொழியா? இப்படிச் சொல்பவர்களை தண்டிக்க மாட்டீர்களா?” என்று சீற்றத்துடன் கேட்டிருக்கிறார் மோடி.
மேலும் "ஜனநாயகத்தில் காங்கிரஸையும் அதன் எமர்ஜென்சி மனப்பான்மையையும் யாரும் நம்புவதில்லை. அதனால் அவர்கள் இப்படி மக்களை சதா தூண்டிவிடுகிறார்கள். இதன் மூலம் இந்தியாவை ஸ்திரமற்ற நிலைக்கு கொண்டு செல்ல காங்கிரஸ் விரும்புகிறது" என்றும் அந்த மேடையில் பிரதமர் மோடி சாடியுள்ளார்.