தமிழ்நாட்டில் உள்ள ஐந்து மாவட்ட ஆட்சியர்கள் ஏப்ரல் 25-ம் தேதி மத்திய அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள முக்கியமான மணல் குவாரிகளில் அரசு நிர்ணயம் செய்யும் அளவைவிட கூடுதலாக மணல் அள்ளப்பட்டு சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாகவும், மணல் ஒப்பந்த குவாரிகளில் கிடைத்த கோடிக்கணக்கான ரூபாய் வருமானத்தை சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபடுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
அதன் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்தாண்டு செப்டம்பரில் தமிழகத்தில் 34 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் மணல் குவாரிகளின் மொத்த ஏஜெண்டாக செயல்பட்டு வந்த தொழிலதிபர்கள் புதுக்கோட்டை ராமச்சந்திரன், திண்டுக்கல் ரத்தினம், கரிகாலன் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகளின் வீடுகளில் இருந்து கணக்கில் காட்டப்படாத பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், ரூ. 12.82 கோடி ரொக்கம், ரூ.56.86 லட்சம் மதிப்புள்ள ஆயிரத்து 24 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
இதனைத் தொடர்ந்து திருச்சி, கரூர், அரியலூர், தஞ்சாவூர் மற்றும் வேலூர் மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆஜராகி குவாரிகள் இதுதொடர்பாக விளக்கமளிக்க அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது. இந்த சம்மனை எதிர்த்து தமிழக அரசின் பொதுத்துறைச் செயலர், நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலர் மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அமலாக்கத் துறையின் சம்மனுக்கு இடைக்காலத் தடை விதித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், தமிழ்நாடு அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது சரியல்ல என்று கூறிய உச்ச நீதிமன்றம் மாவட்ட ஆட்சியர்கள் தான் இதுகுறித்து மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியிருந்தது.
இந்த நிலையில், இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் பணிகள் இருப்பதால் மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று கோரப்பட்டது. ஆனால், அதனை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம் ஏப்ரல் 25-ம் தேதி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஐந்து மாவட்ட ஆட்சியர்களும் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டதுடன் இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது.