ஓட்டுக் கேட்டு வந்தால் கல்லால் அடிப்போம்... ப.சிதம்பரம் பிரச்சாரத்தில் ஆவேசமான கிராமத்துப் பெண்!


காரைக்குடி அருகே மித்ராவயல் பகுதியில் வாக்குச் சேகரித்த ப.சிதம்பரம்

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீண்டும் சிவகங்கை மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். கார்த்திக்கு காங்கிரஸுக்குள்ளேயே எதிர்ப்புகள் வலுத்துள்ள நிலையில், மகனுக்காக பிரச்சாரம் செய்யச் சென்ற ப.சிதம்பரத்துக்கு எதிராக ஆவேசமான கிராமத்துப் பெண் ஒருவர், “ஓட்டு கேட்க வந்தால் கல்லால் அடிப்போம்” என கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் (வலது)

சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் கார்த்தி சிதம்பரத்துக்கு ஆதரவாக அவரது தந்தையார் ப.சிதம்பரம் தொகுதிக்குள் தீவிர பிரச்சாரம் செய்துவருகிறார். இந்நிலையில் காரைக்குடி அருகே உள்ள மித்ராவயல் கிராமத்திற்கு நேற்று இரவு, ப.சிதம்பரம் தனது ஆதரவாளர்களுடன் வாக்குச் சேகரிக்க சென்றார். அப்போது, “கடந்த 5 ஆண்டுகளாக கார்த்தி சிதம்பரம் தொகுதி பக்கமே வரவில்லையே” என் ஆவேசப்பட்ட பெண் ஒருவர், “ப.சிதம்பரம் பேசக் கூடாது” என கூறி எதிர்ப்புத் தெரிவித்தார்.

வாக்கு கேட்க வந்தவர்களிடம் எதிர்ப்பு தெரிவித்த பெண்

இதற்கு ஜீப்பில் நின்றபடி பதிலளித்த ப.சிதம்பரம், "நான் பேசுவதற்கு உரிமை உள்ளது. அதேபோல் நீங்கள் பேசுவதற்கும் உரிமை உள்ளது. முதலில் நான் பேசி விடுகிறேன். பின்னர் நீங்கள் பேசுங்கள்” என்றார்.

இருப்பினும் தொடர்ந்து அந்தப் பெண் பேசியதால், ”அடுத்த தேர்தலில் இந்த அம்மாவுக்கு ஏதாவது ஒரு கட்சியில் சீட் கொடுத்து நிற்க வைங்க” என ப.சிதம்பரம் கூறினார். அந்தக் கிராமத்தில் மதுகுடித்துவிட்டு 3 பேர் இறந்து போனார்கள். கூட்டத்தில் இருந்த சிலர் இதைச் சுட்டிக்காட்டி, “3 பேர் இறந்த சமயத்தில் எம்பி உள்ளிட்ட யாருமே வந்து எட்டிப்பார்க்கவில்லை. அதனால் யாரும் இங்கே ஓட்டு கேட்டு வரக்கூடாது. வந்தால் கல்லால் அடித்து விரட்டுவோம்” என்றனர்.

ப.சிதம்பரத்தின் பிரச்சாரக் கூட்டத்தில் கிராமத்துப் பெண் ஒருவர் ஆவேசமாக பேசிய விஷயம் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

x