ஸ்டாலின் வழியில் எடப்பாடி பழனிசாமி... காய்கறிச் சந்தையில் நடந்தே சென்று ஓட்டு வேட்டை!


துண்டுப் பிரசுரம் கொடுத்து வாக்குச் சேகரிக்கும் எடப்பாடி பழனிசாமி

திருவண்ணாமலை தொகுதி அதிமுக வேட்பாளருக்காக திருப்பத்தூர் காய்கறிச் சந்தை மற்றும் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் நடந்தே சென்று மக்களிடம் வாக்குச் சேகரித்தார் எடப்பாடி பழனிசாமி.

ஏப்ரல் 19-ம் தேதி தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக ஊர் ஊராகச் சென்று தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். திமுக தலைவர் ஸ்டாலின் தினமும் இரண்டு தொகுதிகளைச் சேர்ந்த மக்களிடம் பொதுக்கூட்டம் மூலம் வாக்கு சேகரித்து வருகிறார். அப்படி செல்லும் ஊரில் காலையில் நடைப் பயிற்சி செய்து காய்கறி சந்தை உள்ளிட்ட இடங்களில் மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார் அவர்.

அதேபோல் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் இன்று காய்கறிச் சந்தைக்கு சென்று அதிமுக வேட்பாளருக்கு வாக்குச் சேகரித்தார். திருவண்ணாமலை தொகுதியில் திமுக வேட்பாளராக அண்ணாதுரை, பாஜக வேட்பாளராக அஸ்வத்தாமன், நாம் தமிழர் வேட்பாளராக ரமேஷ்பாபு ஆகியோர் களமிறங்கியுள்ளனர்.

அதிமுக வேட்பாளராக கலியபெருமாள் களத்தில் நிற்கிறார். இவரை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

திருப்பத்தூரில் உள்ள காய்கறிச் சந்தை பகுதியில் நடந்தே சென்ற எடப்பாடி பழனிசாமி, அங்கு பொதுமக்கள், வியாபாரிகளிடம் துண்டறிக்கைகள் கொடுத்து வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அதேபோல், அருகிலுள்ள பேருந்து நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கும் நடந்து சென்ற அவர், அங்கிருந்த பொதுமக்களிடம் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

இதையும் வாசிக்கலாமே...

x