காமெடி பண்ணாதீங்க அன்புமணி... பூத் கமிட்டி அமைக்க கூட பாமகவுல ஆள் கிடையாது... செல்லூர் ராஜூ விளாசல்!


அன்புமணி - செல்லூர் ராஜூ

"பாமகவால் அதிமுக வெற்றிப் பெற்றதாக அன்புமணி கூறுவது மிகப்பெரிய காமெடி" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

பாஜக- பாமக கூட்டணி இறுதியானபோது..

மக்களவைத் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையை ஒரே நேரத்தில் பாஜகவுடனும், அதிமுகவுடனும் நடத்தியது பாமக. ஒரு கட்டத்தில் அதிமுக உடன்தான் கூட்டணி என்று முடிவான நிலையில், இரவோடு இரவாக பாஜகவுடன் கூட்டணி அமைத்து அதிரடியாக அறிவித்தது பாமக. தற்போது தேர்தல் பிரச்சாரத்தில் பாமகவும், அதிமுகவும் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றன.

தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ், "1996ல் ஊழல் வழக்கில் ஜெயலலிதா சிறை சென்ற போது, அதிமுகவுடன் கூட்டணி அமைத்து அக்கட்சிக்கு உயிர் கொடுத்தது பாமக தான். 2019ல் அதிமுகவுடன் பாமகவுடன் கூட்டணி வைக்காவிட்டால் பழனிசாமி முதல்வராக நீடித்திருக்க முடியாது" என்று பேசியிருந்தார். இந்த பேச்சு அதிமுகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

செல்லூர் ராஜூ

இதுகுறித்து மதுரையில் முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகையில், "அன்புமணி ராமதாஸின் பேச்சை எல்லாம் கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டாம். அவரது மனைவி செளமியா அன்புமணி போட்டியிடும் தருமபுரி தொகுதியில் வேலை செய்ய கூட பூத் கமிட்டி ஆட்கள் இல்லை. இதுதான் களநிவலரம். இந்த மனவிரக்தியில் அதிமுகவை பற்றி அன்புமணி பேசி வருகிறார். பாமகவால் அதிமுக ஆட்சி அமைத்தது என்று சொன்னால் இது மிகப்பெரிய ஜோக் தான். பாமக கட்சிக்கு தமிழகத்தில் சில மாவட்டங்களில் மட்டுமே வாக்குகள் உள்ளன. தென் மாவட்டங்களில் தொண்டர்களோ, செல்வாக்கோ, வாக்கோ அக்கட்சிக்கு கிடையாது. அப்படிப்பட்ட கட்சி அதிமுகவை தாங்கியது என்று சொன்னால் கேலிகூத்தாகத் தான் உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...


வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்தது... மாதத்தின் முதல் நாளில் மகிழ்ச்சி!

x