கோவையில் குடிநீர் பஞ்சம் நிலவுவதாக எதிர்க்கட்சியினர் கடும் விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், இது தொடர்பாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
சுமார் 40 லட்சம் பேர் மக்கள் தொகை கொண்ட கோவை மாநகராட்சி பகுதியில் சிறுவாணி கூட்டு குடிநீர் திட்டம் மற்றும் பில்லூர் கூட்டுக் குடிநீர் திட்டம் ஆகியவற்றின் மூலமாக குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் இந்த பணிகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது கோடைகாலம் துவங்கியுள்ள நிலையில், கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இது தொடர்பாக பாஜக மாநில தலைவரும், கோவை மக்களவைத் தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டோர் கடும் குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தனர்.
குறிப்பாக, சிறுவாணி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் பெறப்படும் தண்ணீரின் அளவு குறைந்து இருப்பதால் மாநகராட்சியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதாக அவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், இது தொடர்பாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ’கோவை மாநகராட்சி, குறிச்சி, குனியமுத்தூர், 7 பேரூராட்சிகள் மற்றும் தொண்டாமுத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட 28 குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் 1983-ம் ஆண்டு முதல் இத்திட்டம் பராமரிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு மற்றும் கேரளா அரசுகளுக்கு இடையேயான ஒப்பந்தத்தின் அடிப்படையில் சிறுவாணி அணையில் இருந்து வருடத்திற்கு 1,300 மில்லியன் கன அடி நீர் வழங்கப்பட வேண்டும். அதாவது நாளொன்றுக்கு 101.40 மில்லியன் லிட்டர் தண்ணீர் வழங்க வேண்டும்.
ஆனால், அணையின் நீர் இருப்பை பொருத்து கோவை மாநகராட்சி மற்றும் வழியோர குடியிருப்புகளுக்கு குடிநீர் பகிர்ந்து வழங்கப்படுகிறது. கடந்த 2022-ம் ஆண்டு இரு மாநிலங்களுக்கிடையான சிறுவாணி கூட்டுக் குடிநீர் ஒப்பந்தத்தின் 29-வது கூட்டுக் கூட்டம் நடைபெற்றுள்ளது. அடுத்த கூட்டத்தை நடத்துவதற்கு கேரள அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிறுவாணி அணையில் பராமரிப்பு பணிகளுக்காக இரண்டு தவணைகளாக 5 கோடி ரூபாய் கேரள அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 28-ம் தேதி நிலவரப்படி சிறுவாணி அணையில் 143.48 மில்லியன் கன அடி நீர் உள்ளது. இதன் மூலம் அடுத்த பருவமழை துவங்கும் வரை 102 நாட்களுக்கு குடிநீர் சீராக வழங்க இயலும். அதாவது வருகிற ஜூலை மாதம் 8 தேதி வரை குடிநீரை சீராக வழங்க முடியும். எனவே இது, தொடர்பாக வெளியான தகவல்களில் உண்மை இல்லை’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.