கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதால் 6,180 இந்திய மீனவர்கள் கைது... வெளியுறவுத்துறை அமைச்சர் குற்றச்சாட்டு!


கச்சத்தீவு விவகாரம் தற்போது அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ளது. திமுக, காங்கிரஸ் இந்த விஷயத்தில் துரோகம் செய்துவிட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ள நிலையில் இது குறித்த மேலும் விளக்கங்களை வெளியுறவுத்துறை ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்

பிரதமர் மோடி

"தமிழகத்தின் நலனைக் காக்க திமுக எதுவும் செய்யவில்லை. கச்சத்தீவில் வெளிவரும் புதிய விவரங்கள் திமுகவின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்துவதாக இருக்கிறது. காங்கிரசும், திமுகவும் தங்கள் குடும்பங்களின் நலனைக் காக்க மட்டுமே இயங்கி வருகிறது. தங்கள் மகன்கள் மற்றும் மகள்கள் வளர்ச்சி குறித்து மட்டுமே கவலைப்படுகிறார்கள். அவர்களுக்குப் பொதுமக்கள் நலனில் கவலை இல்லை. கச்சத்தீவு மீதான அவர்களின் அடாவடித்தனம், நமது ஏழை மீனவர்கள் நலன்களில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகிறது" என்று பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் சாடியிருந்தார்.

ஜெய்சங்கர்

அதைத்தொடர்ந்து கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் டெல்லியில் செய்தியாளர்களை இன்று சந்தித்து விளக்கமளித்துள்ளார். " நாடாளுமன்றத்தில் கடந்த 5 ஆண்டுகளாக கச்சத்தீவு விவகாரம் தொடர்ச்சியாக எழுப்பப்பட்டு வருகின்றன. இவ்விவகாரம் தொடர்பாக தற்போதைய தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு 21 முறை பதில் அளித்துள்ளேன். கச்சத்தீவு பிரச்சினை எப்படி உருவானது என்பது மக்களுக்கு தெரிய வேண்டும்.

இலங்கை கடற்பகுதியில் மீன் பிடிப்பதை 1974-ம் ஆண்டு ஒப்பந்தம் தடை செய்யப்பட்டது. 2 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு ஒப்பந்தத்தில் அந்த உரிமைகள் பறிக்கப்பட்டன. கச்சத்தீவை விட்டுக் கொடுப்பதில் எந்த தயக்கமும் இல்லை என ஜவஹர்லால் நேரு அப்போது தெரிவித்தார்.

கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதால் கடந்த 20 ஆண்டுகளில் 6,180 இந்திய மீனவர்கள் இலங்கையால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொரு முறையும் மத்திய அரசின் நடவடிக்கையால் தான் தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஒரே நேரத்தில் பிரதமரும், வெளியுறவுத்துறை அமைச்சரும் கச்சத்தீவு விவகாரத்தை கையில் எடுத்து காங்கிரஸ் மற்றும் திமுகவை சாடியிருப்பது மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் தங்கள் கட்சிக்கு பயனளிக்கும் என்று பாஜக நம்புகிறது.

இதையும் வாசிக்கலாமே...

x