‘தன் வீட்டு மக்களுக்காக மட்டும் சிந்திப்பவர் ஸ்டாலின்’ -கடலூரில் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு


கடலூரில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி

நாட்டு மக்களைப் பற்றி கவலைப்படாமல் வீட்டு மக்களுக்காக சிந்திப்பவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமி

கடலூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் தேமுதிக வேட்பாளர் பி.சிவகொழுந்து போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிச்சாமி இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சந்திசிரிக்கிறது. எங்கு பார்த்தாலும், கொலை, கொள்ளை, திருட்டு, பாலியல் வன்கொடுமை நடக்கிறது. 2017-18ல் நான் முதல்வராக இருந்தபோது ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்று இந்தியா முழுவதும் சர்வே செய்து, தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சிறப்பாக இருந்ததற்காக விருது வழங்கினார்கள். இன்றைக்கு விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி உயர்ந்துள்ளது. ஏழை, எளிய மக்கள் அத்தியாவசிய பொருள்களை வாங்க முடியாமல் தடுமாறி கொண்டிருக்கின்றனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

மக்கள் கஷ்டப்படுவதைப் பற்றியெல்லாம் முதல்வர் ஸ்டாலினுக்கு கவலையில்லை. ஆனால் தொலைபேசியில் அழைத்து நீங்கள் நலமா? என்று ஸ்டாலின் கேட்கிறார். யாராவது நலமாக இருக்கிறீர்களா? நாட்டைப் பற்றி கவலைப்படாமல் வீட்டு மக்களைப் பற்றி மட்டும் சிந்திக்கும் முதலமைச்சர் தமிழ்நாடு முதலமைச்சர். பாஜகவுடன் நாங்கள் கள்ள உறவு வைத்திருக்கிறோம் என கூறுகிறார்கள். ஸ்டாலினுக்கும், உதயநிதி ஸ்டாலினுக்கும் இது கைவந்த கலை. கூட்டணியில் இருக்கும் வரை கூட்டணி தர்மத்தை மதிப்போம். கூட்டணியில் இருந்து வெளியே வந்துவிட்ட பிறகு, மத்தியில் இருக்கும் பாஜக அரசு தமிழ்நாட்டு மக்களுக்கு எதிரான திட்டங்களை கொண்டு வந்தால் கடுமையாக எதிர்ப்போம். முறியடிப்போம்”

இவ்வாறு அவர் பேசினார்.

x