தேர்தலில் பிரதமர் மோடியின் மேட்ச் பிக்ஸிங்; ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு


ராகுல் காந்தி

மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி மேட்ச் பிக்ஸிங் செய்ய முயற்சிப்பதாக காங்கிரஸ் முன்னணி தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை கண்டித்து டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் இந்தியா கூட்டணி கட்சியினர் 'ஜனநாயகத்தை பாதுகாக்கும் பேரணி' என்ற பெயரில் இன்று மாபெரும் பேரணி நடத்தினர்.

இப்பேரணியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ஆம் ஆத்மி சார்பில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், கேஜ்ரிவால் மனைவி சுனிதா கேஜ்ரிவால், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா சார்பில் ஹேமந்த் சோரன் மனைவி கல்பனா சோரன், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ், சீதாராம் யெச்சூரி, திமுக சார்பில் எம்பி- திருச்சி சிவா, திரிணமூல் காங்கிரஸ் சார்பில் எம்பி- சாகரிகா கோஷ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.

சோனியாகாந்தியுடன் சுனிதா கேஜ்ரிவால் (நடுவில்), கல்பனா சோரன் (இடது ஓரம்)

இக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:

இது வாக்குகளுக்கான தேர்தல் அல்ல. அரசியலமைப்புச் சட்டத்தை, ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கான போராட்டம். காங்கிரஸ் கட்சியின் எதிர்க்கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவதை பிரதமர் நரேந்திர மோடி விரும்பவில்லை. தேர்தலுக்கு சற்று முன்பு, அவர் இரண்டு முதலமைச்சர்களை சிறைக்கு அனுப்பினார். அவர் காங்கிரஸ் வங்கிக் கணக்குகள் அனைத்தையும் முடக்கியுள்ளார். ஆறு மாதங்களுக்குப் பிறகு அல்லது ஆறு மாதங்களுக்கு முன்பே இதை செய்திருக்கலாமே. ஆனால் தேர்தலுக்கு முன்பு ஏன் இதைச் செய்கிறீர்கள்?

ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள்

நடுவர்கள், கேப்டன்களுக்கு அழுத்தம் கொடுத்து, வீரர்களை விலைக்கு வாங்கி 'மேட்ச் பிக்ஸிங்' செய்து வெற்றி பெறுகிறார்கள். கிரிக்கெட்டில், இது மேட்ச் பிக்சிங் என்று அழைக்கப்படுகிறது. நமக்கு முன்னால் மக்களவைத் தேர்தல் உள்ளது. நடுவர்களைத் தேர்ந்தெடுத்தது யார்? போட்டி தொடங்குவதற்கு முன்பு, இரண்டு வீரர்கள் (ஹேமந்த் சோரன், அர்விந்த் கேஜ்ரிவால்) கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த தேர்தல்களில் நரேந்திர மோடி மேட்ச் பிக்சிங் செய்ய முயற்சிக்கிறார். பாஜக 400 இடங்களைப் பெற வேண்டும் என்ற கோஷத்தை முன்வைக்கிறது. ஆனால் இவிஎம் (மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்), மேட்ச் பிக்சிங், எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது அழுத்தம் மற்றும் ஊடகங்களை விலைக்கு வாங்குதல் போன்றவை இல்லாவிட்டால் அவர்களால் 180 இடங்களைக் கூட பெற முடியாது” என்றார்.

x