அடுத்தடுத்து சிக்கும் தேர்தல் அதிகாரிகள்; எம்எல்ஏ காரை சோதனையிடாத பறக்கும்படை அலுவலர் சஸ்பெண்ட்


தேர்தல் வாகன சோதனை

சங்கரன்கோவிலில் திமுக எம்எல்ஏ ராஜாவின் காரை முறையாக சோதனையிடாத பறக்கும் படை கண்காணிப்பு அலுவலர் ராதா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

நீலகிரியில் எம்பி- ஆ.ராசா காரில் சோதனை

மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளதால் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. தேர்தல் நேர்மையாக நடைபெற தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மேலும் அரசியல் கட்சிகள், வேட்பாளர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக இரவு 10 மணிக்கு மேல் வாக்கு சேகரிக்கக் கூடாது, பிரசாரத்தில் குழந்தைகளை ஈடுபடுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் உள்ளன. இதேபோல் வாக்காளர்களுக்குப் பணப் பட்டுவாடாவை தடுப்பதற்காக ஆங்காங்கே வாகன சோதனைகளும் நடத்தப்படுகின்றன.

இதில் சாமானிய மக்களின் வாகனங்கள், உடைமைகளை சல்லடை போட்டு தேடும் பறக்கும் படை, வாகன சோதனையில் ஈடுபட்டிருக்கும் அலுவலர்கள் மற்றும் போலீஸார் சில இடங்களில் அரசியல் கட்சி தலைவர்கள், எம்எல்ஏ, எம்பி-க்களின் வாகனங்களை சோதனையிடாமலும், பெயரளவுக்கு சோதனை நடத்தி அனுப்பி வைப்பதாக புகார் எழுந்துள்ளன.

சஸ்பெண்ட்

அந்த வகையில் நீலகிரி மக்களவை தொகுதி உறுப்பினரான திமுகவின் ஆ.ராசா சென்ற காரை முறையாக சோதனையிடாத கோத்தகிரி குழந்தைகள் நலத்திட்ட அலுவலரும், பறக்கும்படை அலுவலருமான கீதாவை, மாவட்ட தேர்தல் அலுவலர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

இதேபோல் மற்றொரு சம்பவமாக திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் பகுதியில் திமுக எம்எல்ஏ ராஜா சென்ற காரை முறையாக சோதனையிடாத புகாரில், பறக்கும் படை கண்காணிப்பு குழு அலுவலரும், சங்கரன்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலருமான ராதாவை மாவட்ட கலெக்டரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான கமல் கிஷோர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழு சோதனைகளில் தேர்தல் விதிமீறலில் ஈடுபடுபவர்கள் சிக்குவார்கள் என்ற நிலையில், கண்காணிப்பு குழுவினரே அடுத்தடுத்து நடவடிக்கைக்கு உள்ளாகி வருவது தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

x