திருச்சியில் தேர்தல் விதிமீறல்: அண்ணாமலை உட்பட 700 பேர் மீது வழக்குப்பதிவு


அண்ணாமலை

திருச்சியில் தேர்தல் நடத்தை விதிமீறலில் ஈடுபட்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அமமுக வேட்பாளர் செந்தில்நாதன் உட்பட 700 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திருச்சி தென்னூரில் அமமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை

மக்களவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்துக்கு முதல்கட்டமான ஏப்ரல் 19ம் தேதியே வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தேர்தலுக்கு மிக குறைந்த நாள்களே உள்ளதால் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் கொளுத்தும் வெயிலிலும் நேரம், காலம் பார்க்காமல் தங்கள் கட்சி, கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

திருச்சி தில்லை நகர் காவல் நிலையம்

இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தேசிய ஜனநாயக கூட்டணியில் திருச்சி தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து தென்னூரில் நேற்று இரவு பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது இரவு 10 மணியை கடந்தும் அண்ணாமலை, அமமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரித்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் அண்ணாமலை, பாஜக நிர்வாகிகள் ராஜசேகரன், காளீஸ்வரன், அமமுக அமைப்புச் செயலாளர் சாருபாலா தொண்டைமான் உள்பட 700 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் திருச்சி தில்லை நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

x