ரெளடிகள், குற்ற வழக்குகள் உள்ளவர்களை தனது கட்சியில் வைத்துக்கொண்டு சட்டம் - ஒழுங்கைப் பற்றி பிரதமர் நரேந்திர மோடி பேசலாமா?. பாஜகவில் 261 ரவுடிகள் உள்ளனர். இதற்கான பட்டியல் எனது கையில் உள்ளது என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்
திமுக சார்பில் சேலம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் செல்வகணபதி, கள்ளக்குறிச்சி வேட்பாளர் மலையரசனை ஆதரித்து பெத்தநாயக்கன்பாளையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “ரெளடிகள், குற்ற வழக்குகள் உள்ளவர்களை தனது கட்சியில் வைத்துக்கொண்டு சட்டம் - ஒழுங்கைப் பற்றி பிரதமர் நரேந்திர மோடி பேசலாமா?. பாஜகவில் 1977 வழக்குகளில் சம்பந்தப்பட்ட 261 ரவுடிகள் உள்ளனர். இதற்கான பட்டியல் எனது கையில் உள்ளது. தமிழ்நாட்டில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகமாக உள்ளதைப் போல் அவதூறு பிரச்சாரம் செய்வது பிரதமர் பதவிக்கு அழகல்ல. போதைப்பொருள் அதிகமாக கைப்பற்றப்பட்ட மாநிலங்களில் பாஜக ஆட்சிதான் நடக்கிறது.
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை உள்ளதாக புதிய புரளியை பேசுகிறார். மணிப்பூரில் இல்லாத சட்டம் ஒழுங்கு பிரச்னையா மற்ற மாநிலங்களில் இருக்கப்போகிறது. மணிப்பூரில் பாஜக ஆட்சிதானே நடக்கிறது. திமுக இருக்கும் வரைக்கும் தமிழ்நாட்டில் மோடி ஆட்டம் செல்லாது. தமிழகத்தை புண்ணியபூமி எனக்கூறும் நரேந்திர மோடி வெள்ளம் வந்தபோது ஏன் வந்து பார்க்கவில்லை. ஒரு மாநில அரசு எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு நாம்தான் எடுத்துக்காட்டு. ஒன்றிய அரசு எப்படி செயல்பட கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டு பாஜக அரசு.
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் சாமானிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் என 10 ஆண்டுகால பா.ஜ.க ஆட்சியில் ஒட்டுமொத்த நாடே தூக்கத்தை தொலைத்துவிட்டனர். தோல்வி பயத்தால்தான் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறையை விட்டு கைது செய்துள்ளார் மோடி.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது திடீரென பிரதமர் மோடிக்கு அக்கறை எழக் காரணம் என்ன?. பெண்கள் பற்றி பேசும் மோடி ஆட்சியில்தன் பாஜக எம்.பி.யால் மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் தொல்லைக்கு ஆளானார்கள். காலையில் இந்தியை திணித்துவிட்டு மாலையில் தமிழ் மீது பாசம் காட்டுவது என்ன மாதிரியான பாசம்?. மோடி மாடல் இன்று அப்பலப்பட்டு நிற்கிறது. ஆனால் திராவிடமாடல் இன்று உயர்ந்து நிற்கிறது. திராவிட மாடல் அரசின் சாதனை திட்டங்களை போல் ஒன்றிய அரசின் சாதனை திட்டங்களை மோடியால் பட்டியலிட முடியுமா?.
பாஜகவில் வேட்பாளர்கள் இல்லை என்பதால், சட்டப்பேரவை உறுப்பினர்களும், ஆளுநரும் போட்டியிடுகின்றனர். நோட்டாவை விட அதிக வாக்குகள் பெற வேண்டும் என்பதே பாஜகவின் இலக்காக உள்ளது. பாஜகவை பற்றிப் பேசாமல், திமுகவை மட்டுமே விமர்சித்து எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார். தனது பதவிக்காக மாநில உரிமைகளை விட்டுக்கொடுத்தவர் எடப்பாடி பழனிசாமி. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, பொள்ளாச்சி பாலியல் வழக்கு உள்ளிட்டவை இபிஎஸ் ஆட்சியில் நடந்தன. திமுகவின் 3 ஆண்டுகால ஆட்சியில் 77.78 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்