"மக்களவை தேர்தலுக்குப் பின் அதிமுக என்ற கட்சியே இருக்காது. அப்படி இருந்தாலும் கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி இருக்க மாட்டார்" என்று பாஜக மாநில பொதுச்செயலாளர் ராம.ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.
2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜகவும், அதிமுகவுன் கூட்டணி வைத்து தமிழகத்தில் போட்டியிட்டன. இதில், தேனி தொகுதியை தவிர 39 தொகுதிகளில் பாஜக-அதிமுக கூட்டணி படுதோல்வியை சந்தித்தது. இந்நிலையில், அதிமுகவை பாஜக நடத்தும் விதம், முக்கியமான மாநில தலைவர் அண்ணாமலை, அதிமுக தலைவர்கள் குறித்து தரக்குறைவான பேச்சு உள்ளிட்ட காரணங்களால் இனி ஒருபோதும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இந்த மக்களவைத் தேர்தலில் தேமுதிக, புதிய தமிழகம் கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் அதிமுக கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. அதனால், பாஜக, அதிமுக இடையே வார்த்தை போர் நடந்து வருகிறது.
இந்நிலையில், 2024 மக்களவைத் தேர்தலுக்கு பிறகு அதிமுக என்ற கட்சியே இருக்காது என்று பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம.ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார். அதுகுறித்து மேலும் பேசிய அவர், "ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ள எஃகு கோட்டைதான் அதிமுக என்கிறார் எடப்பாடி பழனிசாமி. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின் நடந்த எந்த தேர்தலிலாவது ஒன்றரை கோடி வாக்குகளை அதிமுக பெற்றது என்று கூற முடியுமா.. கூட்டணியே வேண்டாம் என்று ஜெயலலிதா தனித்து போட்டியிட்டார். ஆனால், அவரால் கூட்டணி இல்லாமல் போட்டியிட முடியுமா.. மோடியா லேடியா என ஜெயலலிதா கேட்டதுபோல மோடியா எடப்பாடியா என கேட்கும் தைரியம் உள்ளதா..
ஜெயலலிதாவுக்கு இருந்த அரசியல் ஆளுமை அவருக்கு இருக்கிறதா.. சும்மா வாள் எடுத்து சுற்றிக் கொண்டிருக்கிறார். எடப்பாடி பழனிசாமி. இந்த மக்களவைத் தேர்தலுக்கு பின் அதிமுக என்ற கட்சியே இருக்காது. மக்களவை தேர்தலில் பெரும் பின்னடவை சந்தித்து 3ம் இடத்துக்கு தள்ளப்படும். அவர் ஒன்றும் ஜெயலலிதாவோ, எம்ஜிஆரோ அல்ல. எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் அதிமுக கட்சி எவ்வளவு பெரிய பின்னடவை சந்தித்தாலும், அதில் இருந்து மீட்டு கொண்டு வந்தார்கள். அந்தளவிற்கு அவர்கள் போல எடப்பாடி பழனிசாமியால் கொண்டுவர முடியாது. ஏனென்றால் அந்த அளவுக்கு ஆளுமை உள்ள தலைவர் அல்ல. கட்சிக்காரர்களும் அவரை நம்பவில்லை. தேர்தலுக்கு பிறகு அதிமுகவில் பெரிய மாற்றம் நடக்கும். அப்போது எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக இருப்பாரா என்பது சந்தேகம்தான்" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...